சென்னை – (மலேசிய நேரம் 7.00 மணி நிலவரம்) தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் (படம்) ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டத்தை சற்றுமுன் பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து நாளை வாடி வாசலில் காலை 10.00 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுகின்றது. இதனை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தொடக்கி வைக்கின்றார்.
மற்ற பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடக்கி வைக்கின்றார்கள்.
அண்மையக் காலத்தில் தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக – தமிழ் இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த பெருமைக்குரிய வெற்றியாகவும் – இந்த முடிவு பார்க்கப்படுகின்றது.
அதே வேளையில், தமிழகத்தின் ஒட்டு மொத்த அரசியல் பார்வையையும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரேயடியாக மாற்றியமைத்துவிட்டது.
சினிமா மோகத்தில் சீரழிந்து கிடக்கின்றது தமிழகத்தின் இளைய சமுதாயம் – என்ற கூற்றை பொய்ப்பிக்கும் வண்ணம், சினிமா நடிகர்கள் யாரும் இந்தப் பக்கம் வராதீர்கள் என மாணவர்களின் போராட்டக் குழு கூறியிருந்தது.
அதே போல, உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அத்தனை உச்ச நடிகர்களும், எங்களைப் படம் எடுக்காதீர்கள் – மாணவர்களின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் – மெரினா கடற்கரை போய் அவர்களுக்கு முக்கியத்துவம் காட்டுங்கள் என பணிவாக ஊடகங்களைத் தவிர்த்தனர்.
தமிழக மக்கள் அரசியல் கட்சிகளின் பிடியில் சிக்கிக் கிடக்கின்றார்கள் என்ற கூற்றையும் ஒரேயடியாகப் பொய்யாக்கியது இந்தப் போராட்டம். அரசியல் தலைவர்களோ, கட்சிகளோ இந்தப் பக்கம் வரக் கூடாது ‘மூச்’ – என விரட்டியடித்தனர் மாணவர் போராளிகள்.
நடக்க வேண்டியதைப் பாருங்கள் – இல்லாவிட்டால் நகர மாட்டோம் இந்த இடத்தை விட்டு என மாணவர்கள் வெடிகுண்டைத் தூக்கிப் போட புதுடில்லி ஓடினார் ஓ.பன்னீர் செல்வம்.
அம்மாவுக்கும், சின்னம்மாவுக்கும் கைகட்டி வாய்மூடி சேவகம் பார்க்கின்றார் என்ற குறைகூறல்களுக்கு ஆளாகியிருந்த ஓபிஎஸ் மூன்றாண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனையை, நரேந்திர மோடி, மத்திய அரசு ஆகியோரின் ஆதரவு, ஒத்துழைப்புடன், ஓரிரு நாளிலேயே முடித்து வைத்து பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கின்றார்.
இனிவரும் நாட்களில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் தாக்கம் தமிழகத்தின் பல்வேறு முனைகளிலும், பல அரசியல் களங்களிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-இரா.முத்தரசன்