சென்னை – மெரினாவில் இன்று திங்கட்கிழமை காலை முதல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் பணிகளில் காவல்துறையினர் இறங்கினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து கடலுக்குள் சென்றனர்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதட்டம் நிலவி வருகின்றது.
மேலும்,
1.சென்னை அவ்வை சண்முகம் சாலையில் இளைஞர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டை வீசி கலைக்க முயன்று வருகின்றனர்.
2.அதோடு, திருவல்லிக்கேணி பகுதியில் போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தனர்.
3.இதனிடையே, காவல்துறை தடியடி நடத்தியதைக் கண்டித்து இளைஞர் கூட்டமொன்று சாலை மறியல் செய்தனர்.
4.ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
5.மெரினாவில் காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.