Home இந்தியா கரிகால் சோழனுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கரிகால் சோழனுக்கு மணிமண்டபம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

889
0
SHARE
Ad

123

சென்னை, ஜனவரி 16 – கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

தேனி மாவட்டம், லோயர் கேம்ப் பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னி குவிக் நினைவு மணிமண்டபத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்துப் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசியது:

#TamilSchoolmychoice

வைகை படுகையில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு நதி நீரை வைகை படுகைக்குத் திருப்பும் வகையில் அணை கட்டும் திட்டத்தை அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் தயாரித்தது. இத் திட்டத்தை பல்வேறு இடையூறுகளுக்கிடையே கர்னல் ஜான் பென்னி குவிக் கட்டி முடித்தார். இத் திட்டத்தை தொடர்வதற்கான நிதியை குறிப்பிட்ட காலங்களில் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் ஒதுக்கீடு செய்யவில்லை.

இதற்கான நிதி கிடைக்காததை அறிந்த பென்னி குவிக், இங்கிலாந்து சென்று தனது குடும்பச் சொத்துகளை விற்று, அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். 1895-ல் மக்கள் பயன்பாட்டுக்காக இந்த அணை திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

அந்த காலத்திலேயே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கட்டப்பட்ட அணைகளைப் போன்று புவியீர்ப்பு விசை அடிப்படையில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இதனால்தான் நில அதிர்வுகளால் ஏற்படும் விசை போன்றவற்றை தாங்கிக் கொள்ளும் சக்தியோடு அணை இன்றும் உறுதியாக இருக்கிறது.

மேலும், 1980 முதல் 1994 வரை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால அடிப்படையில் அணை வலுப்படுத்தப்பட்டது. அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 152 அடிக்கு மேல் உயரும்போது 1.22 லட்சம் கன அடி நீரை வெளியேற்றும் வகையில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அணையை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தமிழக அரசின் சார்பில் வலுவான வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், எஞ்சியுள்ள பராமரிப்புப் பணிகள் முடிந்தவுடன் அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முடக்கும் வகையிலும், அணையில் பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தடை ஏற்படுத்தும் வகையிலும் கேரள அரசு செயல்பட்டு வந்தது. இதற்கிடையே, அணையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின் படியே நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தவும், பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு எஞ்சிய அளவை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஆகவே, நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் தமிழகத்துக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்.

பென்னி குவிக்கிடம் இருந்த துணிச்சல், மன உறுதி மற்றும் தன்னம்பிக்கை காரணமாகவே அணையை அவரால் கட்ட முடிந்தது. எந்த நிலையையும் சந்திப்பதற்கு, சமாளிப்பதற்கு உரிய துணிச்சல், மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம். இதை முல்லைப் பெரியாறு அணை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையைவிட மிகவும் பழமை வாய்ந்தது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணை. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் சோழனால் கட்டப்பட்டு, இப்போதும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கிறது. இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் கல்லணைதான் மிகவும் பழமை வாய்ந்தது. இப்படிப்பட்ட உறுதியான அணையை உருவாக்கிக் கொடுத்த கரிகால் சோழனின் சேவையை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் ஒரு மணி மண்டபம் அமைக்கப்படும் என்றார் ஜெயலலிதா.