கோலாலம்பூர் – கடந்த 2012-ஆம் ஆண்டில் ஆற்றிய உரையொன்றில் ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் அப்துல் சமாட் (படம்) மீது அவதூறு கூறியதற்காக, அவருக்கு பாஸ் கட்சியின் டத்தோ டாக்டர் ஹசான் அலி 2 இலட்சம் ரிங்கிட் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
மேலும் 35,000 ரிங்கிட் செலவுத் தொகையையும் ஹசான் அலி காலிட் சமாட்டிடம் செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹசான் அலி சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினராவார்.
முன்பு பாஸ் கட்சியில் இருந்த காலிட் சமாட், தற்போது அமானா கட்சியில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.
ஒரு பிரபலமான அரசியல்வாதியான காலிட் சமாட், இஸ்லாம் மதத்திற்கு எதிரானவர் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தும் ஹசான் அலியின் உரை, மதம் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படும் நமது நாட்டில் கண்டிப்பாக அவதூறானது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.