புதுடில்லி – தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து, அதனை மத்திய அரசு ஒத்துழைப்புடன் நிரந்தரச் சட்டமாக்கியுள்ள நிலையில், அந்தச் சட்டத்தை எதிர்த்தும், ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் செய்துள்ள மேல்முறையீடுகளை எதிர்வரும் ஜனவரி 30-ஆம் தேதி இந்தியாவின் உச்ச நீதிமன்றம் விசாரிக்கின்றது.
ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதுபோல் மத்திய அரசாங்கத்தின் விலங்கு நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்தவித மேல்முறையீட்டையும், விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிப்ரவரி 1-ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்குப் பிரசித்தி பெற்ற களமான அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அந்த ஊர் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
எனினும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடிய மாணவர் குழு வந்து பார்ப்பதற்காக, அவர்களுக்கென சிறப்பு பார்வையாளர் பிரிவு ஜல்லிக்கட்டு அரங்கத்தில் ஏற்பாடு செய்து வைத்திருப்பதாக அலங்காநல்லூர் ஊர் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.