“நீண்ட காலம் அவர் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த யுனெஸ்கோ கூரியர் இதழ்களைப் படித்து வியந்து இருக்கின்றேன். தொலைக்காட்சிகள் இல்லாத அந்த நாட்களில், உலகின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் புதிய செய்திகளைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த அந்த இதழை விரும்பிப் படித்து இருக்கின்றேன். அதன் ஒவ்வொரு பதிப்பிலும், நூற்றுக்கணக்கான புதிய தமிழ்ச்சொற்களை ஆக்கி அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார். தரமான அந்த இதழ் நிறுத்தப்பட்ட பிறகு, கலைச்சொற்கள் ஆக்கும் பணியில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். தனி ஒரு மனிதனாக எட்டு கலைச் சொற்கள் அகராதிகளை வெளியிட்டுச் சாதனை படைத்தார்” என்றும் வைகோ மணவை முஸ்தபாவுக்கு புகழாரம் சூட்டினார்.
“மணவை முஸ்தபா அவர்களுடைய இல்லத்திற்கு மூன்று முறை சென்று சந்தித்து உரையாடி மகிழ்ந்து இருக்கின்றேன். அன்னாரது மறைவு எனக்கு மட்டும் அல்ல; தமிழ் கூறும் நல்லுலகிற்கே பேரிழப்பு. அவரது மறைவால் துயருறும் உற்றார்,உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என வைகோ தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.