கோலாலம்பூர் – தடுப்புக் காவலில் எஸ்.பாலமுருகன் மரணமடைந்தது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் மனித உரிமை அமைப்பான சுவாராம், பாலமுருகனை விசாரணை செய்த அதிகாரியை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்த சுவாராம் தலைமை இயக்குநர் டி செவன், “தடுப்புக் காவலில் மீண்டும் ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது பாலமுருகனுக்கு இரத்தம் வழிந்ததாகவும், அவர் இரத்த வாந்தி எடுத்ததாகவும் அவரது குடும்பம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அவர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பாக மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அதோடு அவரது உடம்பில் காயங்களும் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்” என்று கூறினார்.
எனவே, பாலமுருகனை விசாரணை செய்த அதிகாரியை உடனடியாக இடைநீக்கம் செய்து, இந்த வழக்கை மரண விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று டி செவன் குறிப்பிட்டார்.