புதுடெல்லி – கடந்த வாரம், 330 பயணிகள், 15 பணியாளர்களுடன் மும்பையிலிருந்து லண்டன் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜெர்மனியின் கோலென் நகரின் மேல் பறந்த போது, திடீரென ரேடாரில் இருந்து விலகி, தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தது.
சுமார் 15 நிமிடங்களாக முயற்சி செய்தும் கூட, விமானத்துடன் தகவல் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த ஜெர்மனி வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
இதனையடுத்து, மாயமான விமானத்தைத் தேட, ஜெர்மனி விமானப்படை தனது இரு போர் விமானங்களை ஏவியது. அவை வெற்றிகரமாக, அந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தைக் கண்டறிந்து வழிமறித்தன. எனினும் அதற்குள் அவ்விமானம் மீண்டும் தகவல் தொடர்பிற்குத் திரும்பியதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், அவ்விமானம் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த இரு போர் விமானங்களும், ஜெட் ஏர்வேசுக்குத் துணையாக வழிகாட்டியபடியே பறந்து, அவ்விமானம் லண்டனைச் சென்றடைய உதவி செய்தன.
இந்நிலையில், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அவ்விமானத்தில் இருந்த இரு விமானிகளில், தலைமை விமானி உறங்கிவிட்டதாகவும், விமானத்தைச் செலுத்திய துணை விமானி, தவறான அலைவரிசைகளைப் பயன்படுத்தி விமானத்தை இயக்கியதும் தெரியவந்திருக்கிறது.
அதோடு, விமானிகள் தங்களின் ஹெட்செட்டில் ஒலியின் அளவை மிகவும் குறைவாக வைத்திருந்ததும், ஜெர்மன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதற்கு ஒரு காரணம் என்றும் அந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எனினும், இது தொடர்பாக ஜெர் ஏர்வேஸ் நிறுவனமும், ஜெர்மன் வான் போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவதாகவும், விமானிகள் அறையில் நடந்த உரையாடல்களை அறிய குரல் பதிவுக் கருவிகளில் இருந்து தரவுகள் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜெட் ஏர்வேஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
இதனிடையே, ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்குப் பாதுகாப்பாக இரு ஜெர்மனி போர் விமானங்கள் செல்லும் காட்சி, அவ்வழியே சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்டு, இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டது. அதில் கருப்பு நிறத்திலான பொருள் ஒன்று பறப்பது போன்ற காட்சிகளும் பதிவாகியிருந்தன. அது வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் பொருளாக இருக்கலாம் என இணையத்தில் பலராலும் பேசப்பட்டது.
ஆனால் அதனை உடனடியாக மறுத்த வான் போக்குவரத்து ஆராய்ச்சியாளர்கள், அது வேகமாகச் செல்லும் மேகக் கூட்டத்தின் நிழல் என்று தெரிவித்திருக்கின்றனர்.
அக்காணொளியை இந்த யூடியூப் இணைப்பில் காணலாம்:-