பிலிப்பைன்ஸ் – பிலிப்பைன்சில் ஜெர்மன் நாட்டவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே, ஜெர்மனி அரசாங்கத்திடம் தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்திருக்கிறார்.
“உங்கள் நாட்டைச் சேர்ந்தவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டதற்கு நான் மிகவும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவரின் குடும்பத்தினருக்கும், ஜெர்மனி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நாங்கள் முயற்சி செய்தோம். ஒரு மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது”
“நான் அவரின் குடும்பத்தினருக்கும், அரசாங்கத்திற்கும் சிலவற்றை சொல்ல வேண்டும். நாங்கள் உண்மையில் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். சில காலங்களாகவே இராணுவ நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நாங்கள் தோற்றுவிட்டோம். அதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். தோல்வியை ஒப்புக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை” என்று ரோட்ரிகோ டூடெர்டே தெரிவித்திருக்கிறார்.
கடந்த நவம்பர் மாதம், பிலிப்பைன்ஸ் தீவு ஒன்றில் தனது மனைவியுடன் படகில் சென்று கொண்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஜூர்ஜென் காந்தர் என்பவரை, பிலிப்பைன்சைச் சேர்ந்த அபு சயாஃப் என்ற தீவிரவாத அமைப்பு பிணை பிடித்தது.
அப்போது, காந்தரின் மனைவி தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடியதால், அபு சயாஃப்பால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக காந்தரை பிணை பிடித்து வைத்திருந்த அபு சயாஃப், 30 மில்லியன் பிசோஸ் (597,000 அமெரிக்க டாலர்) கொடுத்தால் மட்டுமே காந்தரை விடுவிப்போம் என்று மிரட்டிவந்தது.
ஆனால், கேட்ட பிணைத்தொகை கிடைக்காத காரணத்தால், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, காந்தரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.