கோலாலம்பூர் – கிம் ஜோங் நம் விஷம் தேய்க்கப்பட்டதால் சாகவில்லை என்றும், அவர் மாரடைப்பால் தான் இறந்திருக்கிறார் என்றும் ஐக்கிய நாடுகளுக்கான வடகொரியாவின் முன்னாள் துணைத் தூதர் ரி தோங் இல் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாகக் கலந்தாலோசிக்க கடந்த செவ்வாய்க்கிழமை வடகொரியாவில் இருந்து மலேசியாவிற்கு வந்த பேராளர்களில், ரி தோங் இல்லும் ஒருவர்.
நேற்று வியாழக்கிழமை ரி தோங் இல் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கிம் சோல் (ஜோங் நம்) மாரடைப்பால் தான் இறந்திருக்கிறார் என்று எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அப்படிப்பட்ட சூழலில் அவர் பயணம் செய்யத் தகுதியானவர் அல்ல” என்று ரி தோங் இல் கூறினார்.
ஆனால், மலேசிய சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அண்மையில் வெளியிட்ட தகவலில், கிம் ஜோங் நம்மிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான ஆதாரம், அவரது உடலை ஆய்வு செய்த போது இல்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் ரி தோங் இல் கூறுவதை மறுத்திருக்கிறார்.
கிம் ஜோங் நம் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும், அவரது முகத்தில் விஷம் தேய்க்கப்பட்டதால் தான் இறந்தார் என்றும் மருத்துவ அறிக்கைகள் கூறுவதாக காலிட் தெரிவித்தார்.