Home Featured தொழில் நுட்பம் இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும்!

இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும்!

964
0
SHARE
Ad

muthu nedumaran-jaffna-sri lanka(கடந்த வாரம் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற அனைத்துலக எழுத்துரு மாநாட்டில் கலந்து கொண்ட கணினி வல்லுநர் முத்து நெடுமாறன் அங்கு கொழும்புவில் ஒரு நிகழ்ச்சியிலும், பின்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தொழில்நுட்பத்தில் தமிழ் மொழி குறித்த உரைகளை வழங்கினார். அதுகுறித்து செல்லினம் குறுஞ்செயலித் தளத்தில் 2 மார்ச் 2017-இல் இடம் பெற்றது இந்தக் கட்டுரை)

இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும். இதனை கொழும்பிலும் யாழ்பாணத்திலும் நடந்த இருவேறு நிகழ்ச்சிகளில், செல்லினத்தின் தோற்றுநர், முத்து நெடுமாறன் அறிவித்தார்.

muthu nedumaran-sri lanka-1கொழும்பில் நடந்த கலந்துரையாடலில் முத்து நெடுமாறன்…

#TamilSchoolmychoice

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் ஏற்பாட்டில் பிப்பிரவரி 26ஆம் நாள் கொழும்பிலும், வடக்கு தகவல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 27ஆம் நாள் யாழ்ப்பாணத்திலும் இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மின்னுட்பக் கருவிகளில் தமிழின் பயன்பாடு குறித்த இந்நிகழ்ச்சிகளில், ஊடகவியலாளர்கள், நுட்பவியலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுப் பயனர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் உள்ளிடுமுறைகள் ஒருங்கிணைக்கப் பட்டப்பின் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், எழுத்துகளின் வடிவ அமைப்பும் அவற்றின் தன்மைகளும், கையடக்கக் கருவிகளில் பயன்படுத்தப்படும் செயலிகளும் அவற்றின் தமிழ்ப் பயன்பாடும் முதலிய தலைப்புகளில் முத்து நெடுமாறனின் படைப்பு அமைந்திருந்தது.

கலந்துரையாடலின் போது, பல கேள்விகள் எழுப்பப்பட்டன அவற்றுக்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன. பேசப்பட்டக் கருத்துகளுள் முதன்மையாக நின்றது இலங்கையில் பயன்படுத்தப்படும் தமிழ் விசைமுக அமைப்பும் (keyboard layout) பரிந்துரைகளில் (word suggestions) இலங்கையில் பயன்படுத்தப்படும் சொற்களும்.

இலங்கைக்கான தமிழ் விசைமுக அமைப்பு

தமிழ்த் தட்டச்சு முறைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ‘பாமினி’ என்னும் எழுத்துரு இலங்கையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்துருவாகும். எந்தவித உள்ளீட்டுச் செயலியும் (input method software) இன்றி இந்த எழுத்துருவை மட்டும் கொண்டே தமிழில் தட்டெழுதிவிடலாம்.  பல ஆண்டுகளாக இந்த முறையைக் கொண்டே தமிழில் எழுதிப் பழகிய பயனர்கள் வேறு தமிழ் உள்ளிடு முறைக்கு மாறுவதற்கு, பல சிரமங்களைக் கண்டனர்.

2007ஆம் ஆண்டு இலங்கையின் ஐசிடிஏ (ICTA) எனப்படும் அமைப்பு, இலங்கைக்கான முறையான தமிழ் விசைமுகம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற நோக்கில், ஓர் ஆய்வினை மேற்கொண்டது.  நடப்பில் இருக்கும் விசைமுக அமைப்புகளை ஒப்பாய்வு செய்தது. தட்டச்சு, தமிழ்-99 முதலிய விசைமுகங்கள் ஆய்வில் சேர்க்கப்பட்டன.

கையில் எழுதுவது போலவே தட்டெழுதுவதற்கும் (type as you write) ஆய்வில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்தனர். இறுதியில் ‘பாமினி’ அமைப்பையே தேர்ந்தெடுத்து, யூனிகோடு முறைக்காக சில மாற்றங்களை மட்டுமே செய்து ‘SL Tamil Keyboard 2007’ என்ற பெயரில் அதனை வெளியிட்டது ICTA அமைப்பு. இந்த விசைமுகத்தின் மற்றொரு பெயர் ‘ரெங்கநாதன் விசைமுகம்’ (Renganathan Keyboard).

sellinam-renganathan keyboard-ரெங்கநாதன் விசைமுக அமைப்பு. நன்றி: Gihan Dias

கணினிக்காக வடிவமைக்கப்பட்ட இந்த விசைமுகத்தை கையடக்கக் கருவிகளில் எவ்வாறு சேர்க்கலாம் என்பது குறித்து முதலில் சில ஆய்வுகளும், தக்காரோடு சில கலந்துரையாடல்களும் நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே செல்லினத்தில் இந்த அமைப்பு சேர்க்கப்படும் என்றும் முத்து நெடுமாறன் கூறினார்.

இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியல்

செல்லினத்தைக் கொண்டு தமிழில் உள்ளிடும்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ள பல வட்டார வழக்குச் சொற்கள் பரிந்துரைகளாகத் தோன்றுவதில்லை என பலர் குறைபட்டுக் கொண்டனர்.  இதற்கு எளிதாகவே தீர்வு கண்டுவிடலாம் என்றும், ‘இலங்கைத் தமிழ்’ சொற்கள் அதிகம் அடங்கிய தரவகம் (corpus) இருந்தாலே போதும் என்றும் முத்து நெடுமாறன் கூறினார். கூட்டத்தில் இருந்த ஆர்வலர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உடனே முன்வந்தனர்.

muthu nedumaran - srilanka -2யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருடன் முத்து நெடுமாறன்.

muthu nedumaran-jaffna-sri lanka-2யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் முத்து நெடுமாறன்…