கோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம், மலேசிய விமான நிலையத்தில், ‘விஎக்ஸ் நெர்வ் ஏஜெண்ட்’ என்ற கொடிய விஷத்தன்மை கொண்ட இரசாயனம் தேய்த்துக் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் என ஐக்கிய நாடுகள் வகைப்படுத்தியிருக்கும் அந்த இரசாயனம் கொண்டு பொதுமக்கள் கூடும் இடத்தில் இப்படி ஒரு கொலை நடத்தப்பட்டிருப்பதற்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து மலேசிய அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அது போன்ற இரசாயன ஆயுதத்தை யார் மீதும், எங்கும், எந்த ஒரு சூழ்நிலையிலும் பயன்படுத்துவதை அமைச்சு வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுஇடத்தில் அதனைப் பயன்படுத்தும் போது பொதுமக்களுக்கு அது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்” என்று தெரிவித்திருக்கிறது.
மலேசிய வெளியுறவு அமைச்சு சம்பந்தப்பட்ட அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, இந்தச் சம்பவம் தொடர்பாக தடைசெய்யப்பட்ட இரசாயனங்கள் குறித்து கலந்தாலோசிக்கவிருக்கிறது.