பாலி – மலேசிய வருகையை முடித்துக் கொண்டு, இந்தோனிசியா சென்றுள்ள சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான்னும் (படம்) அவரது குழுவினரும், இன்று சனிக்கிழமை உலகப் புகழ்பெற்ற பாலித் தீவு வந்தடைந்து அங்குள்ள கடற்கரை ஓரத்தில் உல்லாசமாக ஓய்வெடுக்கவிருக்கின்றனர்.
அவர்களுக்குத்தான் ஓய்வும், உல்லாசமும், கொண்டாட்டமும்! ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கும் இந்தோனிசிய இராணுவத்தினருக்கும், பாதுகாவல் படையினருக்கும் இது பெரும் திண்டாட்டமாக இருக்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
81 வயதான சவுதி மன்னர், 1,500 பேர் கொண்ட குழுவினரோடு வருகை தந்திருக்கின்றார். அதில் 25 இளவரசர்கள், 10 அமைச்சர்கள் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் 9 விமானங்களில் தனிப்பட்ட முறையில் ஓய்வெடுப்பதற்காக பாலித் தீவு கடற்கரைக்கு வருகின்றனர்.
அவர்களைப் பாதுகாக்க 2,500 காவல் மற்றும் இராணுவத் துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி கடல் பகுதியில் கடற்படைக் கப்பல்கள் காவலுக்கு அணிவகுத்து நிற்கின்றன.
ஏறத்தாழ ஒரு இராணுவப் பயிற்சி போல இந்த நடவடிக்கைகள் இந்தோனிசிய இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்றது.
மலேசிய வருகையை முடித்துக் கொண்ட சவுதி மன்னரை நஜிப் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த காட்சி (படம்: நன்றி – நஜிப் டுவிட்டர் பக்கம்)
மன்னரின் போயிங் 747- இரக விமானம் தரையிறங்கும்போது பொன்னிறத்திலான படிக்கட்டுகள் அவருக்காக கொண்டு வந்து வைக்கப்படும். இந்தப் படிக்கட்டுகளும், இரண்டு விமானங்கள் நிறைய அவரது பொருட்களும், தரை விரிப்புகளும், துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க முடியாத இரண்டு மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் முன்கூட்டியே பாலித் தீவு வந்தடைந்து விட்டன.
மன்னர் குழுவினரோடு பயணப்படும் பொருட்களின் எடை 500 டன்னுக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
அவர்கள் தங்கப் போகும் ஐந்து நட்சத்திர விடுதிகளை ஒட்டியிருக்கும் கடற்கரையில் 7 அடி உயரத்துக்கான திரைகள் எழுப்பப்பட்டு மற்றவர்களும், வெளியார் புகைப்படக்காரர்களும் பார்க்க முடியாத வண்ணம் மறைக்கப்பட்டிருக்கின்றது.
அரச வருகையாளர்கள் மணலில் நடக்காத வண்ணம் மரப் பலகைகளால் ஆன நடைபாதைகள் கடலை நோக்கி அமைக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறாக, சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது சவுதி மன்னரின் மற்ற நாடுகளுக்கான வருகை.
பிப்ரவரி 26-ஆம் தேதி மலேசியாவுக்கு வருகை தந்த சவுதி மன்னர் தற்போது இந்தோனிசிய வருகையை முடித்துக் கொண்டு, புருணை, ஜப்பான், சீனா, மால்டிவ்ஸ் தீவுகள், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் வருகை மேற்கொள்கின்றார்.