கோலாலம்பூர் – சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள், அவர் ஓரினப் புணர்ச்சி குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டதால் அவரை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அன்வார் ஏன் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை விளக்கி, வழக்கறிஞர்கள் எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் பல காரணங்களை அடுக்கியுள்ளனர்.
குறிப்பாக 15 செப்டம்பர் 2015-இல் ஐக்கிய நாட்டு சபையின் துணைக் குழு ஒன்று அன்வாரின் சிறைத் தண்டனை சட்டவிரோதமானது என்றும் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அறிவித்திருப்பதை மேற்கோள் காட்டி அன்வாரின் விடுதலையை அந்தக் கடிதம் வலியுறுத்தியிருக்கிறது.
ஐநாவின் கண்டனத்திற்குப் பின்னரும் அன்வார் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருப்பது அனைத்துலகப் பார்வையில் நாட்டின் தோற்றத்தையும் மதிப்பையும் பாதித்திருக்கிறது என்றும் அன்வாரின் வழக்கறிஞர் குழு அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் வாதிட்டிருக்கிறது.
இது தொடர்பாக அன்வாரின் வழக்கறிஞர்கள் என்.சுரேந்திரன் மற்றும் லத்தீஃபா கோயா இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஐநாவின் உறுப்பிய நாடு என்ற முறையில் ஐநா துணைக் குழுவின் முடிவுகளை மலேசியா மதித்து நடக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்களின் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள் இருவரும் தங்களின் கடிதத்தை உள்துறை அமைச்சருக்கும், சிறைச்சாலைத் துறை ஆணையருக்கும் அனுப்பியுள்ளனர்.
சிறைச்சாலை சட்டம் 1995-இன் கீழ் 43-வது விதியின்படி சிறைத் தண்டனையின் ஒரு பகுதி காலத்தை அனுபவித்த ஒருவரைத் தகுந்த காரணங்களோடு சிறைச்சாலை தலைமை ஆணையர் விடுதலை செய்ய முடியும் என்றும் சுரேந்திரனும், லத்தீஃபாவும் தங்களின் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர்.