கோலாலம்பூர் – மாணவர்களின் கற்றல் முறையை இலகுவாக கண்டறியும் நோக்கில் ஸ்டார் புரோடிஜி நிறுவனம், கருத்தரங்குகளையும் பட்டறைகளையும் முறையே பல பள்ளிகளில் நடத்தி வருகின்றது.
எந்த ஒரு மாணவனும் கல்வியை சுமையாக கருதாமல் அவன் வழியே சென்று, கல்வியை சுகமாக்க முயல்வதே இக்கருத்தரங்கின் தலையாய நோக்கமாகும்!
அவ்வகையில் கடந்த பிப்ரவரி மாதம், 24-ம் தேதி, கிள்ளானில் அமைந்துள்ள சிம்பாங் லீமா தமிழ்பள்ளியில், “ மாணவர்களின் கற்றல் முறையின் அடிப்படையில் போதித்தல்” என்ற விளக்கவுரையுடன் கூடிய பயிற்சியினை ஆசிரியர்களுக்கு வழங்கியிருந்தனர்.
(சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்)
சுமார் 50 ஆசிரியர்கள் கலந்து கொண்ட இப்படறையை ஸ்டார் புரோடிஜி நிறுவனத்தின் பயிற்றுனரும் நாடறிந்த பேச்சாளருமான செந்தில்நாதன் வழி நடத்த, அவருடன் அஸ்ட்ரோ “விழுதுகள்” புகழ் கண்ணா சிம்மாதிரி, தன்னை செதுக்கிய தமிழ் பள்ளியும் அவை சார்ந்த அனுபங்களையும் பகிர்ந்துக் கொண்டார்.
பார்த்தல், கேட்டல், தொட்டுணர்தல்(தொடுதல்) என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிப்பது? அதன் ஊடே, இக்குணாதிசயங்களை கொண்ட மாணவர்களை எப்படி அடையாளம் கண்டு கையாள்வது? போன்ற பல சுவாரசியமான தகவல்களை செந்தில் விளக்கமாக விவரித்திருந்தார்.
சிலாங்கூர், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி நாட்டின் சிறந்த பள்ளிகளுள் ஒன்றாகும். இப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி கோகிலவாணி, இப்பட்டறையில் பங்கு கொண்டு இறுதி வரையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கற்றல் கற்பித்தலில் இருக்கும் அவரது ஆர்வமும் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்புமானது, இப்பள்ளியின் மிகச் சிறந்த சாதனைக்கு காரணமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
ஸ்டார் புரோடிஜி நிறுவனத்தார் இப்பயிற்சியை நாட்டில் உள்ள அனைத்து தமிழ்பள்ளிகளுக்கும் கொண்டுச் செல்ல எண்ணம் கொண்டிருக்கின்றனர். எனவே இந்நிகழ்வு குறித்த மேல் விபரங்களுக்கு 012 – 5607003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.