Home Featured உலகம் சிங்கப்பூர் கல்வி அமைச்சில் மலேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் 2 நாள் பட்டறை

சிங்கப்பூர் கல்வி அமைச்சில் மலேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் 2 நாள் பட்டறை

1338
0
SHARE
Ad

சிங்கப்பூர் – தமிழ் பாடத்திட்ட நிருவாகிகள் எவ்வாறு மெதுபயில்வோர் மற்றும் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களின் கற்றல் தேவைகளையும் பிரச்சனைகளையும் களைந்து ஆக்ககரமான பயிற்றுவிப்பு முறையைச் செயல்படுத்தலாம் என்பதை அறிய, அரசு சாரா இயக்கமான, மலேசிய தேசிய டிஸ்லெசியா இயக்கத்தின் தலைவர் முனைவர் முல்லை இராமையாவை பட்டறை மற்றும் கருத்தரங்கம் நடத்த சிங்கப்பூர் கல்வி அமைச்சின் தமிழ்ப் பிரிவு, சிங்கப்பூருக்கு அழைத்திருந்தது.

mullai-ramaiah-dyslexia-singapore-2பட்டறையில் கலந்து கொண்டவர்களுடன் முல்லை இராமையா…

மேலும், இது போன்ற பிரத்தியேக கற்பித்தல் முறையை எவ்வாறு பாடத் திட்டத்திற்குள் கொண்டு வருவது என்பது பற்றியும் அறிய முல்லை இராமையாவின் ஆலோசனைகளை சிங்கப்பூர் கல்வி அமைச்சின் தமிழ்ப் பிரிவு நாடியது.

#TamilSchoolmychoice

மார்ச் திங்கள் 9-10ஆம் நாட்களில், உமறுப்புலவர் தமிழ் மொழி மையத்தில், கருத்தரங்கையும் பட்டறையையும் நடத்த கல்வி அமைச்சின் தமிழ்ப் பிரிவு துணை இயக்குனர் சாந்தி செல்லப்பனும் அவரது குழுவினரும் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பே முனைவர் முல்லையுடன் தொடர்பு கொண்டு டிஸ்லெக்சியா பட்டறையை செம்மையாக நடத்த எற்பாடுகள் செய்து 23 அதிகாரிகளுக்கு சிங்கை கல்வி அமைச்சு இதை நடத்தியது.

mullai-ramaiah-dyslexia-singaporeபட்டறைக்கான ஏற்பாடுகளில் முல்லை இராமையா – ஏற்பாட்டாளர்கள்…

கல்வித் துறையில் எதைச் செய்தாலும் அதை மிகச் சரியாகச் செய்யவேண்டும் என்பதில் சிங்கப்பூர் அதிக கவனம் செலுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் இன்னொரு நிகழ்ச்சியாக இந்தப் பட்டறைக்கான ஏற்பாடுகள் அமைந்திருந்தன.

இந்த இரண்டு நாள் பட்டறையில் கீழ்க்காணும் பல்வேறு அம்சங்களைக் கொண்டு பல கோணங்களில் படைப்புகள் நடத்தப்பட்டன:-

  • பல விதமான கற்றல் குறைபாடுகள்;
  • அந்தக் குறைபாடுகள் ஒவ்வொன்றுக்குமான வித்தியாசங்கள் மற்றும் இணைந்து வரக்கூடிய குறைபாடுகள்;
  • குறைபாடுகளை அடையாளம் காணுதல், மாணவரை மதிப்பீடு செய்தல்;
  • பாதிப்புகள், அவற்றைக் களையும் வழிவகைகள்;
  • ஒலிவழி கற்பிக்கவேண்டிய அவசியம்;
  • பாடத் திட்டத்திற்கான வார்ப்புரு;
  • ஒலி வழி பயிற்று வளங்கள்;
  • பதின்ம வயது கற்றல் பிரச்சனைகள்;
  • கற்றல் குறையுடைய மாணவர்களை சராசரியான பள்ளிகளில் சேர்ப்பதா, பிரத்தியேக பள்ளிகளில் சேர்ப்பதா?

சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகள் தனித்து இயங்குவது இல்லை, தமிழ் மொழிப்பாடம் பாலர் பள்ளி முதற்கொண்டு, 6 வருடங்கள் ஆரம்பப் பள்ளியிலும், நான்கு வருடங்கள் இடை நிலைப்பள்ளியிலும் மேலும் இரண்டு வருடங்கள் ஜூனியர் காலேஜிலும் (A Level) தாய்மொழிப் பாடமாக அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் கட்டாயமாக கற்றுத்தரப்படுகிறது.

இதனால், எந்தப் பள்ளியில் படித்தாலும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவன், எல்லாப் பள்ளி நிலைகளிலும், தரமான தமிழை எழுத வாசிக்க கற்றுத் தேறுகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூரில் இயங்கி வரும் மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கம்  மலேசியாவில் பல்வேறு தமிழ்ப் பள்ளிகளிலும், பல்வேறு நகர்களிலும் டிஸ்லெக்சியா தொடர்பான கருத்தரங்குகளை, பட்டறைகளை நடத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் சார்பாக அதன் தலைவரும், டிஸ்லெக்சியா துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டவருமான முல்லை இராமையாவை,  பட்டறைப் பயிற்சிகள் நடத்த சிங்கப்பூருக்கு அழைக்கப்பட்டிருப்பது இந்த இயக்கத்தின் சேவைகளுக்குக் கிடைத்திருக்கும் ஒரு கௌரவமாகக் கருதப்படுகின்றது.