சென்னை – நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் எனக்கூறி மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுத்துள்ள வழக்கில், நடைபெற்று வரும் விசாரணையில், அத்தம்பதி கூறிய அங்க அடையாளங்கள், தனுஷுக்கு இருக்கிறதா? என அண்மையில் சோதனை நடத்தப்பட்டது.
அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று திங்கட்கிழமை வெளியாகின. அதில் தனுஷ் உடம்பில் சில மச்சங்களும், தழும்புகளும் லேசர் சிகிச்சை முறையில் அழிக்கப்பட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், அப்பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட மதுரை மருத்துவக் கல்லூரி டீன் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் தகவலில், தான் வெளியிட்ட அறிக்கையை ஊடகங்கள் திரித்து வேறு கோணத்தில் வெளியிட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருப்பதாக ‘பிகைண்ட் உட்ஸ்’ செய்தி வெளியிட்டிருக்கிறது.
அம்மருத்துவ அறிக்கையில், சிறிய மச்சங்களும், தழும்புகளும் லேசர் முறையில் அகற்றப்படலாம் ஆனால் பெரிய அளவிலான மச்சங்களையோ, தழும்புகளையோ முற்றிலும் அடையாளம் தெரியாமல் நீக்க முடியாது என்றே குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.