சென்னை – நயந்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படமான ‘டோரா’ கடந்த வாரமே வெளியாக இருந்த நிலையில், சில காரணங்களால் மார்ச் 31-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
இதனிடையே, அத்திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் தான் கிடைத்தது. வழக்கமாக ‘ஏ’சான்றிதழ் பெறும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு இருக்காது. அதனால் மீண்டும் தணிக்கைக் குழுவிடம் தயாரிப்பாளர் தரப்பு கோரிக்கை வைத்தது. எனினும், யு/ஏ சான்றிதழ் மட்டுமே அத்திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், டோரா திரைப்படத்திற்குப் புதிதாக ஒரு சிக்கல் வந்திருக்கிறது.
‘டோரா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர், நேமிசந்த் ஐபக், கடந்த 2013-ம் ஆண்டு, தனது கதையை வாங்கிவிட்டு மறுநாள் திருப்பி கொடுத்ததாகவும், தற்போது அதே கதையை ‘டோரா’ என்ற பெயரில் படமாக்கியிருப்பதாகவும் துணை இயக்குநர் ஒருவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதனை விசாரணை செய்த நீதிமன்றம், வரும் மார்ச் 24-ம் தேதி, தயாரிப்பாளர் நேமிசந்த் ஐபக்கை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருக்கிறது.
இதனால், வரும் மார்ச் 31-ம் தேதி, ‘டோரா’ வெளியாகுமா? என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.