Home Featured நாடு “33.5 மில்லியன் ரிங்கிட் மாயமாகவில்லை” – கமலநாதன் விளக்கம்!

“33.5 மில்லியன் ரிங்கிட் மாயமாகவில்லை” – கமலநாதன் விளக்கம்!

786
0
SHARE
Ad

Kamalanathanகோலாலம்பூர் – 2016-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்காக வழங்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட்டில், 33.5 மில்லியன் மாயமானதாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் விதமாகக் கல்வி துணையமைச்சர் டத்தோ கமலநாதன் இன்று செவ்வாய்க்கிழமை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் கமலநாதன் கூறியிருப்பதாவது:-

“பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் 2016-ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் கீழ் 9 வகையான பள்ளிக்கூடங்களுக்காக 500 மில்லியன் ரிங்கிட்டினை வழங்குவதாக அறிவித்திருந்தார். அந்த ஒதுக்கீட்டில் பள்ளிகளின் பிரிவினைக் குறிப்பிடாத நிலையில், தமிழ்ப்பள்ளிகளுக்காக 50 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாகவும் அதில் 33.5 மில்லியன் ரிங்கிட் எங்கே? என பலத் தகவல் ஊடகங்கள் மக்கள் மத்தியில் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன”

#TamilSchoolmychoice

“உண்மை நிலவரத்தில் 2016-ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தினை மறுபரிசீலனை செய்த பிறகு,  நிதி அமைச்சு கல்வி அமைச்சுக்கு 70 மில்லியன் ரிங்கிட்டினை மட்டுமே வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பணம் 6 வகையான பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. அதாவது தமிழ்ப்பள்ளி (16.5 மில்லியன்), சீனப்பள்ளி (16.5 மில்லியன்), முபாலிக் பள்ளி (16.5 மில்லியன்), அரசாங்க உதவி பெறும் அகாமா பள்ளி (SABK) (16.5 மில்லியன்), இடைநிலைப்பள்ளி (3 மில்லியன்), ராக்யாத் துப்போங் மற்றும் ராக்யாத் ஜாலான் ஹஜி போல்ஹஸ்ஹான் பள்ளி (1 மில்லியன்) போன்றவை ஆகும்”

“இது தொடர்பாக  செப்டம்பர் 2016-ல்  (நிதியமைச்சின் தலைமைச் செயலாளர்) டான்ஸ்ரீ இர்வான்  செரிகார் அவர்களைச் சந்தித்து இவ்வொதுக்கீடு குறைக்கப்பட்டது தொடர்பான விவரங்களைக் கேட்டிருகின்றேன். இச்சந்திப்பில் வழங்கப்பட்ட விவரங்களை கல்வி அமைச்சு மற்றும் ம.இ.கா-வின் தேசிய தலைவர் டாக்டர்  சுப்ரமணியத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பிறகு, 16.5 மில்லியன் ரிங்கிட்டினைப் பெற சம்மதித்தோம்.”

“அதே சமயத்தில் கல்வி அமைச்சின் பிரதிநிதியான நான், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியம் அவர்களுக்கு மீதமுள்ள 33.5 மில்லியன் ஒதுக்கீட்டினைப் பெற்றுத் தரும்படி கடிதம் அனுப்பியிருந்தேன். டாக்டர் ச. சுப்ரமணியம் இக்கடிதத்தைத் தொடர்ந்து  மீதமுள்ள மானியத்தைக் கோரி கடந்த 3 ஜனவரி 2017-ம்  தேதி, பிரதமருக்கு மற்றொரு கடிதத்தை அனுப்பியிருந்தார்”

“அது மட்டுமின்றி கடந்த 6-ம் தேதி இரண்டாவது நிதியமைச்சரான டத்தோஸ்ரீ ஜொஹாரி பின் அப்துல் கானியைச் சந்தித்து மீதமுள்ள 33.5 மில்லியன் ரிங்கிட் மானியத்திற்கான கடிதத்தையும் கொடுத்திருந்தேன்.  அவர் 2016-ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தை மறுபரிசீலனை செய்த பிறகு, நமது பிரதமர் மீதமுள்ள 33.5 மில்லியன் மானியத்திற்கான விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்டு மீண்டும் மறுபரிசீலனை செய்வதாக குறிப்பிட்டார். இருந்த போதிலும், 2017-ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரிங்கிட்டினை விரைவாக வழங்க முயற்சிப்பதாக தெரிவித்தார்”

“2016-ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 16.5 மில்லியன் ரிங்கிட்  நாடு முழுவதுமுள்ள 251 தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.  ஆக மொத்தமாக, தமிழ்ப்பள்ளிகளுக்கு இதுவரை 2015-ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட்டோடு சேர்த்து 66.5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது”

“தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகமான தேவைகள் இருக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு கல்வி அமைச்சோடு இணைந்து பல்வேறு முயற்சிகளை நானும் மேற்கொண்டு வருகின்றேன்.  தற்போது வழங்கப்பட்டுள்ள 16.5 மில்லியனால் 251 அரசாங்க உதவிபெறும் தமிழ்ப்பள்ளிகள் பயன்பெற்றதைத் தொடர்ந்து 2017ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 50 மில்லியனை அரசாங்க தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு வழங்கவிருக்கிறோம். மேலும், இம்மானியம் தொடர்பான அனைத்து விவரங்களும் எனது முகநூலில் தெளிவாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இம்மானியம் கொடுக்கப்பட்ட பள்ளிக்கூடங்களின் பட்டியல் கடந்த 12 ஜனவரி 2017-ம் தேதி தொடங்கி 21 ஜனவரி 2017 தேதி வரை எனது முகநூலில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன”

“அதனைத் தொடந்து, எனது அலுவலகத்திலிருந்து அரசாங்க தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களின் தேவைகளை சேகரித்து வருகிறோம். ஆகவே, அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப மானியம் கூடிய விரைவில் வழங்கப்படவிருக்கின்றது. எனவே, தகவல் ஊடக நண்பர்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள். அனைத்து தகவல்களையும் வெளியிடுவதற்கு முன்பதாக அதனை நன்கு ஆராய்ந்து அறிந்து கொள்ளவும்” – இவ்வாறு கமலநாதன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.