Home Featured இந்தியா பிரதமர் – சுப்ரா தலையீட்டால் விசா கட்டணங்கள் மாற்றமில்லை!

பிரதமர் – சுப்ரா தலையீட்டால் விசா கட்டணங்கள் மாற்றமில்லை!

962
0
SHARE
Ad

subra-2

புதுடில்லி – இந்திய வருகையை முன்னிட்டு தற்போது புதுடில்லியில் இருக்கும், பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் மஇகா தேசியத் தலைவரும்,  சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஆகியோரின் தலையீடு காரணமாக, திடீரென உயர்த்தப்பட்ட இந்தியாவுக்கான விசா கட்டணங்களில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நஜிப் வருகையை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தியும் தற்போது இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இருக்கிறார்.

#TamilSchoolmychoice

விசா கட்டணங்கள் உயர்வால் மலேசிய இந்தியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்றும், அதிருப்திகளைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் டாக்டர் சுப்ரா, இந்தியத் தூதரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து இந்த கட்டண மாற்றங்கள் அமுலுக்கு வருவது நிறுத்தப்பட்டது.

சுற்றுலாப் பயண முகவர்களும் இந்த விசா கட்டணங்களுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கான விசா கட்டணம் 456 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்ட முடிவு திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இதே காலகட்டத்திற்கான கட்டணம் 180 ரிங்கிட்டாக மட்டும் இருந்தது.

தனது அதிருப்தியையும், கருத்துகளையும் தெரிவித்த பின்னர், இந்தியத் தூதர் கோலாலம்பூர் திரும்பியதும் கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்யப் போவதாகத் தெரிவித்ததாகவும் சுப்ரா அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இதற்கிடையில், பிரதமர் நஜிப்பின் கவனத்திற்கும் இந்த கட்டண உயர்வுகளை சுப்ரா கொண்டு சென்றதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் பரிசீலனைக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போதைக்குக் கட்டண உயர்வுகள் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.