பியோங்யாங் – அமெரிக்கப் போர் கப்பலான கார்ல் வின்சனை வடகொரியாவிற்கு அனுப்பியிருக்கும் டிரம்ப் தலைமையிலான அரசுக்கு, பியோங்யாங் எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, போருக்குத் தாங்கள் தயார் என்றும் அறிவித்திருக்கிறது.
“டிபிஆர்கேவிற்கு எதிராகப் படையெடுக்கும் அமெரிக்காவின் பொறுப்பற்ற முடிவு, ஒரு தீவிரமான நடவடிக்கையை அடைந்திருப்பது உறுதிப்படுத்துகிறது. அமெரிக்கா விருப்பப்பட்டால், எப்படிப்பட்ட போராக இருந்தாலும் அதனை வடகொரியா எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது” என்று வடகொரியாவின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக அந்நாட்டின் தேசிய செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்திருக்கிறது.
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை தகர்க்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இராணுவ ஆலோசகர்களுக்கு சில ஆலோசனைப் பட்டியலை வழங்கி, தயாராக இருக்கும் படி உத்தரவிட்டிருப்பதாக, மிரர் செய்தி நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இராணுவ ஆலோசகர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் எச்.ஆர்.எம்சி மாஸ்டர், இதனை தனது தலைமை கமாண்டரிடம் உறுதிப்படுத்தியிருப்பதோடு, வடகொரியாவை நோக்கி அமெரிக்க போர் கப்பல்களையும் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.