கோலாலம்பூர் – நஜிப்புக்கு அடுத்த பிரதமராக நடப்பு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் நேற்று புதன்கிழமை பிரதமர் துறையின் சிறப்புப் பொறுப்புகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது அம்னோவிலும், நாட்டின் அரசியல் மையங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த, பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான ரபிசி ரம்லி “இதனால் சாஹிட்டின் பிரதமர் கனவுகள் கலையலாம். இந்த நியமனம் அவருக்குச் சாதகமானது அல்ல” எனக் கோடி காட்டியிருக்கிறார்.
எனினும், பிரதமரின் இந்த முடிவைத் தற்காத்துப் பேசியிருக்கும் ஹிஷாமுடின் “எங்களுக்கிடையில் யாரும் முடிச்சுப் போட முயற்சி செய்ய வேண்டாம். ஆரூடம் கூறி குழப்பம் ஏற்படுத்துவதுதான் ரபிசியின் வேலை” எனச் சாடியிருக்கிறார்.
சாஹிட்டின் அனுமதியுடன்தான் இந்த நியமனம் செய்யப்பட்டது என்றும் ஹிஷாமுடின் கூறியிருக்கிறார்.