Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: “தி ஃபேட் ஆஃப் த பியூரியஸ்” – அதிவேகம், அணு ஆயுதம் எல்லாம் இருக்கு,...

திரைவிமர்சனம்: “தி ஃபேட் ஆஃப் த பியூரியஸ்” – அதிவேகம், அணு ஆயுதம் எல்லாம் இருக்கு, ஆனால் கதை?

900
0
SHARE
Ad

Fast8கோலாலம்பூர் – வேகம்.. அதிவேகம்.. அசுரவேகம்.. இந்த மூன்று தாரக மந்திரங்களால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வந்த ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப்பட வரிசையின் 8-வது பாகம் அதே பரபரப்போடு வெளியாகியிருக்கிறது.

2015-ம் ஆண்டு வெளியான ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7’ உலகம் முழுவதும் 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூல் சாதனையை நிகழ்த்தியது. படத்தின் வெற்றிக்கு பின்னால் ஒரு சோகமும் இருந்தது. படத்தில் பிரையின் ஓ கான்னர் என்ற முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த பால் வாக்கர் 2013-ம் ஆண்டு நிகழ்ந்த கார் விபத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போக, பாதியில் நின்ற படத்தை எப்படி படக்குழுவினர் மீட்டனர் என்பதைப் பார்க்க உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கு ஏற்ப அத்திரைப்படத்தின் கடைசிக் கிளைமாக்ஸ் காட்சியில் பால் வாக்கரின் சாயல் கொண்ட அவரின் சகோதரர்களை வைத்து படத்தை நிறைவு செய்தனர்.

சரி.. பால் வாக்கர் இல்லாத ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் 8’ அதாவது அமெரிக்காவில் ‘தி ஃபேட் ஆஃப் த பியூரியஸ்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கும் புதிய பாகம் எப்படி இருக்கிறது? என்று பார்ப்போம்.

#TamilSchoolmychoice

கதைச்சுருக்கம்

முன்னாள் கிரிமினலும், கார் ரேசருமான வின்டீசல் தனது மனைவி மிச்சேல் ரோட்ரிகசுடன் சுற்றுலாத் தளம் ஒன்றில் விடுமுறையைக் கழித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது சிப்பர் (சார்லிஸ் தெரோன்) என்ற பெண், அவரை அணுகி, தனக்கு சட்டத்திற்குப் புறம்பான சில உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு வின்டீசல் தான் இப்போது அது போன்ற காரியங்களைச் செய்வதில்லை என்று கூற, வின் டீசலைப் பற்றிய இரகசியம் ஒன்றைக் காட்டி மிரட்டத் தொடங்குகிறார். அதன் பின்னர், வின்டீசல் அப்பெண் சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார்.

Fast8(c)ஒரு மிகப் பெரிய அணு ஆயுதக் கடத்தலுக்கு திட்டமிடும், சிப்பர் மற்றும் அவருடன் இணைந்த ஹேக்கர்ஸ் குழு, தங்களது திட்டத்திற்கு வின் டீசலைக் கருவியாகப் பயன்படுத்துகிறது.

வின் டீசல் மீண்டும் தடம் மாறிப் போவதாக உணரும் மிச்சேல் ரோட்ரிகோசும், அவரது நண்பர்களும், அந்த பேராபத்தில் இருந்து வின் டீசலையும் உலகத்தையும் காப்பாற்றினார்களா? என்பதே மீதிக் கதை.

ரசிக்க

‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப்படத்திற்கு வரும் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் இயக்குநர் எஃப் கேரி கிரே, அதன் முந்தைய பாகங்களின் ரசனைக்கு ஈடாக, இப்பாகத்திலும் அதிவேக கார் பந்தயங்கள், வெடித்துச் சிதறும் வாகனங்கள் என மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளால் ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறார்.

வின்டீசல் – மிச்சேல் ரோட்ரிகஸ் இடையிலான காதல், டுவெயின் ஜான்சன் (ராக்) – ஜேசன் ஸ்டாதாம் இடையிலான முட்டல் மோதல், டைரஸ் ஜிப்சாம் – கிரிஸ் பிரிட்ஜெஸ் இடையிலான காமெடிக் குறும்புகள் என ரசிப்பதற்கான காட்சிகள் நிறைய இருக்கின்றன.

Fast8(b)விமானத்தில் பறந்தபடியே, சிப்பர் குழு, நியூயார்க்கில் உள்ள கார்கள் பலவற்றை இயக்கி பேராபத்தை ஏற்படுத்துவது புதுமையாக இருப்பதோடு, அக்காட்சி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கின்றது. அதேவேளையில், வின் டீசலை கண்காணிக்க நகரத்தில் உள்ள கேமராக்களையெல்லாம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தந்திரமும் மிகவும் ரசிக்க வைக்கின்றது. ஸ்டீபன் ஒளிப்பதிவு அக்காட்சிகளை மிகவும் அருமையாகப் பதிவு செய்திருக்கிறது.

சிறையில் அடைக்கப்படும் ராக், ஒரு அசுரனைப் போல் அங்கிருப்பவர்களை அடித்து நொறுக்குவதும், சிறையில் இருந்து வெளியேறுவதுமாக காட்சி ஒன்றில் மிரட்டியிருக்கிறார்.

சிப்பராக நடித்திருக்கும் சார்லிஸ் தெரோன் மிகச் சிறப்பான நடிப்பு. மெல்லப் பேசி அதி பயங்கரமான காரியங்களைச் செய்யும் கதாப்பாத்திரத்தில் சரியாகப் பொருந்திப் போகிறார்.

விமானத்தில் குழந்தையுடன் ஜேசன் போடும் சண்டை மிகவும் ரசிக்க வைக்கின்றது. அதுவும் அந்தக் குழந்தையின் நடிப்பு சூப்பர்.

இது தவிர, படத்தில் வகை வகையான ஸ்போர்ட்ஸ் கார்கள், பனிப்பிரதேசத்தில் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சி, கியூபாவில் நடக்கும் கார் பந்தயம் என ரசிப்பதற்கு ஏராளமான விசயங்கள் படத்தில் இருக்கின்றன. கடைசிக் காட்சியில் பால் வாக்கரை நினைவுபடுத்துவது போல் அமைந்திருக்கும் ஒரு காட்சி நெகிழவைக்கின்றது.

சலிப்பு

சில சாகசக் காட்சிகளின் மூலம் இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வரும் படம், வித்தியாசமான கதையாலும், அதற்கேற்ற விறுவிறுப்பான திரைக்கதையாலும் திருப்திப்படுத்தத் தவறிவிட்டது.

பல படங்களில் பார்த்த கதை என்பதால், என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது? என்பதை மிக எளிதில் கணித்துவிட முடிவது படத்திற்கு மிகப் பெரிய பலவீனமாக இருக்கின்றது.

Fast8(a)‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7’ பாகத்தை எடுத்துக் கொண்டால், கார் ஸ்கை டைவிங், அபு தாபியில் நடக்கும் விறுவிறுப்பான கடத்தல் காட்சி என கேமரா வித்தியாசமான இடங்களில் பயணித்திருந்தது.

இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் விமானத்திலேயே எடுக்கப்பட்டிருப்பதால், ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7’ கொடுத்த ஒரு நிறைவையும், மகிழ்ச்சியையும் இத்திரைப்படம் கொடுக்கவில்லை.

எல்லாவற்றையும் விட, சுத்தமாக லாஜிக்கே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் பல நம்ப முடியாத காட்சிகள் சில தரப்பினரை மகிழ்ச்சிபடுத்தினாலும், சில தரப்பு ரசிகர்களை ஏமாற்றவே செய்யும்.

மொத்தத்தில், ‘தி ஃபேட் ஆஃப் த பியூரியஸ்’ திரைப்படத்தில் அதிவேகம் இருக்கிறது ஆனால் வலுவான கதை இல்லை என்பதே குறை. லாஜிக், கதையை எதிர்பார்க்காமல் அதிவேகத்தை மட்டும் எதிர்பார்த்துச் சென்றால், நிச்சயமாக ரசித்து விட்டு வரலாம்.

-ஃபீனிக்ஸ்தாசன்