சிங்கப்பூர், மார்ச் 22 – சரவாக் மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட்டின் (படம்) ஊழல் விவகாரம் பற்றி வெளியான அந்த சர்ச்சைக்குரிய ஒளிநாடாவில் அவரும் அவரது உறவினர்களும் தாங்கள் சட்டத்துக்கு புறம்பான முறையில் சம்பாதித்த ஆதாயங்களை சிங்கப்பூரில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறியிருப்பதை சிங்கப்பூர் அரசாங்கம் முற்றிலும் மறுத்துள்ளது.
மேலும் அந்த ஒளி நாடாவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மலேசிய அரசாங்கம் கோரிய வரி தொடர்பான தகவலை சிங்கப்பூர் அரசு தரமறுத்தாக சொல்லப்பட்டிருப்பதையும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் மத்திய நிதி வங்கி மறுத்துள்ளது.
இதுபற்றி சிங்கப்பூரின் மத்திய வங்கி, உள்ளூர் செய்தித்தாளான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூலமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை சிங்கப்பூருக்கும், மலேசியாவிற்கும் இடையே நிதி சம்பந்தமான தகவல் பரிமாற்றங்களில் இரு நாடுகளும் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி நட்புறவோடு செயல்பட்டு வருவதாகவும், மலேசியா கேட்டுக் கொண்ட அனைத்து வரி தொடர்பான தகவல்களையும் சிங்கப்பூர் அரசாங்கம் உடனுக்குடன் வழங்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.