கேமரன் மலைக்கான தனது இரண்டு நாள் வருகையின்போது மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் நிகழ்ச்சிகளில் முத்தாய்ப்பாகவும், உச்சகட்ட அரசியல் நிகழ்ச்சியாகவும் அமைந்தது சனிக்கிழமை இரவு மஇகா சார்பில் அனைத்து இனங்களோடும் நடத்தப்பட்ட ஒன்று கூடும் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் சுப்ரா, மஇகா கேமரன் மலையில் மீண்டும் போட்டியிடும், மற்ற எந்த தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிக்கும் விட்டுக் கொடுக்காது என்று மீண்டும் வலியுறுத்தினார்.
கேமரன் மலை ஒன்று கூடும் நிகழ்ச்சியில் சுப்ரா…
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேமரன் மலை அம்னோ தலைவரும், கேமரன் மலை நாடாளுமன்றத்திற்குட்பட்ட ஜெலாய் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஹாஜி வான் ரோஸ்டி, கேமரன் மலையில் மீண்டும் மஇகா போட்டியிடுவதற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான வான் ரோஸ்டி (படம்) தனதுரையில் “இங்கு தேசிய முன்னணியின் மூன்று கட்சிகளும் ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகின்றோம். நாடாளுமன்றத்தில் மஇகா வேட்பாளர் நிற்க, இங்குள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான, ஜெலாய் சட்டமன்றத் தொகுதியில் அம்னோவும், தானா ராத்தா சட்டமன்றத் தொகுதியில் மசீசவும் தொடர்ந்து போட்டியிட்டு வந்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் இணைந்து இங்கு தேசிய முன்னணியின் வெற்றிக்காகவும், இந்தப் பிரதேசத்தை மேம்படுத்தவும் பாடுபட்டு வருகின்றோம். நிரூபிக்கப்பட்ட இந்த அரசியல் பாரம்பரியம் தொடரவேண்டும். இங்கு மீண்டும் மஇகா போட்டியிட அம்னோ ஆதரவு தரும்” என அறிவித்திருக்கிறார்.