புதுடெல்லி – புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் வினோத் கன்னா, இன்று வியாழக்கிழமை காலமானார். கடந்த சில மாதங்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வினோத் கன்னா, சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.
வினோத் கன்னாவின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களோடு, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் வினோத் கண்ணாவின் மறைவை அறிந்து இரங்கல் வெளியிட்டு வருகின்றது.
கடந்த 1968-ம் ஆண்டு சுனில் தத் நடித்த ‘மன் கா பிரீத்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமான வினோத் கன்னா, அதன் பின்னர் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார். அவற்றில் அமர் அக்பர் ஆண்டனி, குர்பானி, மேரி அப்னே, மேரா கான், மேரா தேஷ், உள்ளிட்டவை மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது.
அதன் பின்னர் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து உச்சத்திற்குச் சென்ற வினோத் கன்னா, 1982-ம் ஆண்டு, திடீரெனப் பத்திரிக்கையாளர்களை அழைத்து தான் பாலிவுட்டில் இருந்து விலகி, அமெரிக்கா சென்று அங்கு ஓஷோ ராஜ்னீஷுடன் ஆன்மீகத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அது அன்றைய காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாலிவுட் திரையுலகின் பல்வேறு உயரிய விருதுகளையும் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வினோத் கன்னா பெற்றிருக்கிறார்.
நடிகராக மட்டுமல்லாது, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் வினோத் கன்னா பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், வினோத் கன்னாவிற்கு சில மாதங்களுக்கு முன் சிறுநீர்ப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதனையடுத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததாகவும் மருத்துவமனை அறிக்கை கூறுகின்றது.
வினோத் கன்னாவிற்கு கவிதா என்ற மனைவியும், ராஹுல், அக்சய், சாக்ஷி, ஷிரதா என நான்கு பிள்ளைகளும் இருக்கின்றனர்.