Home Featured தொழில் நுட்பம் ஃபேஸ்ஆப் செயலி: விளையாட்டு வினையாகுமா? – ஃபேஸ் ‘ஆப்பு’ பக்கங்கள் ஓர் அலசல்!

ஃபேஸ்ஆப் செயலி: விளையாட்டு வினையாகுமா? – ஃபேஸ் ‘ஆப்பு’ பக்கங்கள் ஓர் அலசல்!

1232
0
SHARE
Ad

FaceApp1கோலாலம்பூர் – பேஸ்புக்கில் இப்போது புதிய செயலி ஒன்று இளைஞர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.

உங்கள் பேஸ்புக் நண்பரோ அல்லது நண்பருக்கு நண்பரோ, வித்தியாசமான முறையில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருப்பார். அப்புகைப்படத்தில் அவர் இளமையாக, வயது முதிர்ந்த தோற்றத்தில், பளீச்சிடும் அழகாக மற்றும் எதிர்பாலினமாக மாறியிருப்பார். இது எப்படி சாத்தியம்? ஒப்பனை செய்து கொண்டாரா? இல்லை. அதற்குக் காரணம் ‘ஃபேஸ்ஆப் (FaceApp)’ என்று புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஒரு குறுஞ்செயலி.

இச்செயலி குறித்த அறிமுகம், ‘சிறுவன் முதல் வயதான தோற்றம் வரை’ – ஃபேஸ் ஆப் செயலி செய்யும் மாயம்!’ என்ற தலைப்பில் ஏற்கனவே செல்லியலில் வெளியாகியிருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், விளையாட்டாக இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஃபேஸ்ஆப்’ செயலியின் ‘ஆப்பு’ பக்கங்களையும் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.

1.இச்செயலியில் யாருடைய புகைப்படத்தை வேண்டுமானாலும் கொடுத்து அவர்கள் இளமையாக, வயது முதிர்ந்த தோற்றத்தில், எதிர்பாலினமாக இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அதைப் பதிவிறக்கம் செய்து பேஸ்புக், டுவிட்டர், வாட்சாப், இண்ஸ்டாகிராம் என பிரபல நட்பு ஊடகங்களில் பகிரவும் செய்யலாம். அதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. யாரும், யாருடைய புகைப்படத்தையும் அவர்கள் அனுமதியின்றி மாற்றலாம் என்பதே பிரச்சினை தான். முன்பெல்லாம் இப்படிப்பட்ட மார்ஃபிங் வேலைகளுக்குக் குறைந்த பட்சம் ‘போட்டோஷாப்’ மென்பொருளைப் பயன்படுத்தவாவது தெரிந்திருக்க வேண்டும். இப்போது அப்படியல்ல இச்செயலியிடம் கொடுத்தால், அதுவே எல்லாவற்றையும் தத்ரூபமாகச் செய்து கொடுத்துவிடுகின்றது.

2.இப்படி மார்ஃபிங் செய்யப்படும் புகைப்படங்களால் என்ன பிரச்சினை நேரும் என்கிறீர்களா? முதலில் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு இதை சில விஷமிகள் பயன்படுத்தக் கூடும். இது போன்ற தாக்குதல்கள் வளர்ந்தவர்கள், பெரியவர்கள் மத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் கிண்டல், கேலிகளுக்கு இச்செயலி வழிவகுக்கக் கூடும். காரணம், சின்ன விசயங்களைக் கூட மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எடுத்துக் கொள்ளும் பருவம் என்பதால், அங்கு இச்செயலியால் பிரச்சினை தான்.

Salman khan3. ஃபேக்ஐடி என்றழைக்கக்கூடிய போலி பக்கங்களுக்கு இப்புகைப்படங்கள் பயன்படுத்தப்படக்கூடும். இச்செயலி ஆணின் முகத்தை மிக அழகான பெண்ணாகத் தத்ரூபமாக மாற்றுகிறது. சிறிய சந்தேகம் கூட வராத அளவிற்குத் தத்ரூபம். அதேபோல் தான் பெண்களையும். என்றாலும் பெண்களை ஆணாக மாற்றுவதில் அவ்வளவு தத்ரூபம் இருப்பதில்லை. ஒரு சில முகங்கள் அதற்கு விதிவிலக்கு. இப்படியிருக்க, வாட்சாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில், இப்புகைப்படங்களைப் பயன்படுத்தி பல சேட்டைகள் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது.

4.மேலும், திருமண வரன்களுக்கு புகைப்படம் அனுப்புவது போன்றவற்றில் கூட இச்செயலியால் தில்லு முல்லு நடக்க வாய்ப்பு இருக்கிறது. காரணம், எவ்வளவு மாநிறமாக இருந்தாலும், ‘ஃபேஸ்ஆப்’ உங்களை பளீச்சென வெள்ளை நிறமாக மாற்றிவிடும். அதுமட்டுமா? இச்செயலியில் இருக்கும் ‘ஸ்மைல்’ என்ற தேர்வின் மூலம் உங்கள் புன்னகையைக் கூட மாற்ற முடியும்.

FaceApp

எனவே, ஃபேஸ்ஆப் என்ற செயலி இப்போது, இந்த சூழ்நிலையில், விளையாட்டாகப் பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக இருந்தாலும் கூட, அதன் தத்ரூபமான சேவைகள் வேறு வகையான பிரச்சினைகளை நட்பு ஊடகங்களில் உருவாக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஃபேஸ்ஆப் நிறுவனம் இதனைக் கருத்தில் கொண்டு, புகைப்படங்களுக்குக் கீழே ‘FaceApp’ என்ற தங்களின் நிறுவனப் பெயரை எளிதில் நீக்கிவிட முடியாத படியோ அல்லது ‘இது ஃபேஸ்ஆப்’-ல் எடிட் (மாற்றம் செய்யப்பட்ட) புகைப்படம் தான்’ என்பதை பார்ப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் படியோ மாற்றங்களைக் கொண்டு வந்தால், நிச்சயமாக இது ஒரு அருமையான பொழுதுபோக்கு சமாச்சாரமாக மட்டுமே இருக்கும். இல்லையென்றால் விளையாட்டு வினையாகக் கூடும் என்பதே நவீனத் தொழில்நுட்பங்களைக் கவனித்து வரும் நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது.

-ஃபீனிக்ஸ்தாசன்