ஈப்போ – மலேசியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் வாக்காளர் மறு சீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் மற்றும் ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் சூ ஆகிய இருவரின் மறு சீராய்வு மனுவுக்கான அனுமதி கோரும் விண்ணப்பத்தை ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.
தனது வழக்கறிஞர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குலசேகரன் மற்றும் தோமஸ் சூ…(படம் – நன்றி : குலசேகரன் இணையத் தளம்)
இந்த மனுவுக்கு இப்போது அவசியம் இல்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் இரண்டாவது ஆட்சேபங்களுக்கான விசாரணையின்போது, மனுதாரர்கள் குறிப்பிடும் ஆட்சேபங்களைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி செ ருசிமா கசாலி தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கின்றார். ஆட்சேபங்களுக்கான விசாரணை இன்னும் நடைபெறவில்லையாதலால் அதற்குள்ளாக மனுதாரர்கள் மறுசீராய்வு மனுவைச் சமர்ப்பித்திருப்பதை ஏற்றுத் தீர்ப்பு வழங்க முடியாது எனவும் நீதிபதி குறிப்பிட்டிருக்கின்றார்.
இருப்பினும் இதே போன்றதொரு வழக்கில் கடந்த மே 3-ஆம் தேதி மலாக்கா உயர்நீதிமன்றம் மறுசீராய்வு மனுவுக்கு தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அனுமதி வழங்கியிருக்கின்றது.
அந்த வழக்கின் தீர்ப்பை மனுதாரர்கள் மேற்கோள் காட்டியிருந்தாலும் அதனைப் பின்பற்றப் போவதில்லை என்றும் மாறாக, ஏற்கனவே மேல் முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal) நூருல் இசா தொடுத்திருந்த வழக்கின் தீர்ப்பைத் தான் பின்பற்றப் போவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகத் தங்கள் தரப்பினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப் போகின்றோம் என குலசேகரன் அறிவித்திருக்கிறார்.