Home Featured நாடு சிலாங்கூர் ஆட்சிக் குழுவிலிருந்து விலக பாஸ் ஏன் பயப்படுகிறது?

சிலாங்கூர் ஆட்சிக் குழுவிலிருந்து விலக பாஸ் ஏன் பயப்படுகிறது?

806
0
SHARE
Ad

PAS Logo

ஷா ஆலாம் – பிகேஆர் கட்சியுடனான அரசியல் உறவுகளை முறித்துக் கொள்வதாக பாஸ் கட்சி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவிலிருந்து அது விலகிக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய வேளையில், இரட்டை வேடம் போடுவது போல், ஆட்சிக் குழுவில் தொடர்ந்து நீடிப்போம் என பாஸ் அறிவித்திருக்கின்றது.

இது அம்னோவுக்கு பெரும் ஏமாற்றமாகும். அதனால்தான் சிலாங்கூர் அம்னோ தலைவரும் அமைச்சருமான நோ ஓமார் பாஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கி அறிக்கையும் விட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சி ஆட்சிக் குழு உறுப்பினர்கள் சிலாங்கூர் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியும் அதிரடியாக அறிவித்து விட்டார்.

azmin-ali2எனினும் தனது சட்டமன்ற உறுப்பினர்களையும், ஆட்சிக் குழு உறுப்பினர்களையும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திலிருந்து விலக்கிக் கொள்ள பாஸ் கட்சி அஞ்சுவது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.

காரணம், அவ்வாறு விலகிக் கொள்ளச் சொல்லி, பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மறுத்துவிட்டால், கட்சியில் பிரச்சனைகள், பிளவுகள் ஏற்படும்.

சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி, அதன் மூலம் சிலாங்கூர் மாநில அரசாங்கம் கவிழ்ந்து விட்டால், மீண்டும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திற்கு மட்டும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால், பாஸ் தனித்து நின்று மோசமான தோல்விகளைத் தழுவும் வாய்ப்பும் இருக்கிறது.

எனவேதான், பாஸ் கட்சி சிலாங்கூர் அரசாங்கத்திலிருந்து விலகுவதால் ஏமாந்த கட்சியாகி விடக் கூடாது எனக் கருதி, சாமர்த்தியமாக, இரட்டை வேடம் போடுவது போல் பிகேஆர் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்கிறோம் என ஒருபுறம் தங்களின் அரசியல் சுயத் தன்மையை நிலைநாட்டுவதுபோல் அறிவித்து விட்டு, இன்னொரு புறத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்கும் முடிவை பாஸ் கட்சி எடுத்திருக்கிறது.

இன்னொரு பயமும் பாஸ் கட்சிக்கு இருக்கின்றது. தாங்கள் விலகிவிட்டால், தங்களுக்குப் பதிலாக அமானா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக சிலாங்கூர் அரசாங்கத்தில் நுழைந்து விடுவார்கள் – அதன் மூலம் அரசியல் ரீதியாக சிலாங்கூரில் தங்களுக்கு எதிராக பலமும் பெற்று விடுவார்கள் – என்ற அச்சமும் பாஸ் தலைமைத்துவத்தைச் சூழ்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.

அதற்குத் தகுந்தாற்போல் சில காரணங்களையும் பாஸ் கண்டுபிடித்திருக்கிறது.

முதலாவதாக, சிலாங்கூர் வாக்காளர்கள் எங்களை அடுத்த பொதுத் தேர்தல் வரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதால், அவர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் பதவி விலக மாட்டோம் என அறிவித்தார்கள்.

ஆனால், நேற்று பாஸ் கட்சி சார்பாக விடுக்கப்பட்டிருக்கும், அறிக்கையில், ஜசெக சிலாங்கூர் மாநிலத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிடுவார்கள் என்பதால் அவர்களைக் கண்காணிக்க ஆட்சிக் குழுவில் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என புதுமையான காரணம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆக, அம்னோவினரும் சில அரசியல் தரப்புகளும் எதிர்பார்ப்பதுபோல், சிலாங்கூர் மாநில அரசாங்கத்திலிருந்து பாஸ் கட்சி விலகுவதும், அதனால் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திற்கு மட்டும் இடைத் தேர்தல் நடக்கும் என்ற நிலைமையும் இப்போதைக்கு ஏற்பட வாய்ப்பில்லை.

-இரா.முத்தரசன்