புத்ராஜெயா – நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புத்ராஜெயாவில் அமைந்திருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் இல்லத்தில் நடைபெற்ற தேசிய உருமாற்றம் 50 (டிஎன்50) உரையாடலில், பிரதமரைக் கேள்வி கேட்ட திரைப்பட இயக்குநர் டேவிட் டியோவை அக்கூட்டத்தில் பங்கேற்ற மற்றொருவர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமர் நஜிப் நடுவில் நிற்க அவரைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வட்ட மேசையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில், அந்த வட்ட மேசையில் ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே நஜிப் கேள்விகளை எடுத்துக் கொள்வதாக, திரைப்பட இயக்குநர் டியோ குற்றம் சாட்டினார்.
உடனடியாக, அந்த உரையாடலை வழிநடத்திக் கொண்டிருந்த இயக்குநரும், நடிகருமான ரோஸ்யாம் நோர், டியோவைச் சமாதானப்படுத்தி, அவருக்கு வழங்கப்பட்ட 1 நிமிடத்தை பயனுள்ள கேள்வியைக் கேட்குமாறு வலியுறுத்தினார்.
டியோ கேள்வி கேட்கத் தொடங்கிய போது, கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர், “பிரதமர் முன்னால் திமிராக நடந்து கொள்ளாதே” என்று கூறியவாறு டியோவைத் தாக்கினார்.
இச்சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்த பாதுகாவலர்கள் இருவரையும் தடுத்து, அங்கிருந்து வெளியேற்றினர்.
அதன் பின்னர், நடந்த சம்பவத்திற்கு ரோஸ்யாம் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
என்றாலும், மிகவும் அமைதியுடனும், புன்னகையுடனும் நின்ற நஜிப், அவர்கள் இருவரையும் மீண்டும் மேடைக்கு அழைக்கச் சொல்லி இருவரையும் சமாதானம் செய்யச் சொன்னார்.
பிரதமரின் பேச்சைக் கேட்டு அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சமாதானம் செய்து தழுவிக்கொண்டனர்.
அதனைக் கண்ட கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.