கோலாலம்பூர் – இந்தியாவால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு, சவுதி அரசு குடியுரிமை வழங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வங்காள தேசத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதி ஒருவன், ஜாகிர் நாயக்கின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அச்செயலைப் புரிந்ததாக வாக்குமூலம் அளித்ததால், ஜாகிர் நாயக் மீது பயங்கரவாதத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தது இந்தியா.
இந்நிலையில், இந்தியாவை விட்டு வெளியே மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தங்கியிருந்த ஜாகிர் நாயக்கை, கைது செய்ய இந்தியா இண்டர்போலின் உதவியை நாடியதோடு, ஜாகிர் நாயக்கின் கடப்பிதழையும் இரத்து செய்தது.
இந்நிலையில், ஜாகிர் நாயக்கிற்கு சவுதி அரசு குடியுரிமை வழங்கியிருக்கிறது.ஏற்கனவே மலேசிய அரசு ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தரவசிப்பிடத் தகுதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.