செரண்டா – இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்டதோடு, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் செரண்டா தமிழ்ப்பள்ளியைக் கட்டித்தரக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செரண்டா தமிழ்ப்பள்ளியைக் காப்பாற்றுவோம் இயக்கத்தின் தலைவர் ஜீவாவுடன், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 50 பேர், ஸ்ரீ செல்வ கணபதி ஆலையத்தின் முன்பு, கூடி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களின் அமைதிப் பேரணிக்கு உலுசிலாங்கூர் காவல்துறையினர் பாதுகாப்பளித்தனர்.
இந்நிலையில், ஜீவா ஊடகங்களிடம் பேசுகையில், “கடந்த 2012-ம் ஆண்டு, முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இப்பள்ளியைத் துவங்க அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் பின்னர் மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிய பின்னர், கடந்த 2015-ம் ஆண்டு, உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும், துணைக் கல்வியமைச்சருமான டத்தோ ப.கமலநாதன், இரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டினார். அதன் பின்னரும் இன்று வரை தூண்கள் ஊன்றப்பட்ட நிலையிலேயே அப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் நிற்கின்றன” என்று ஜீவா தெரிவித்தார்.
மேலும், இப்பள்ளியைக் கட்டுவதற்காக அரசாங்கம் 63 லட்சம் ரிங்கிட் ஒதுக்கியிருக்கும் நிலையில், அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்காவிட்டால், இங்குள்ள பெற்றோர்களுடன் சேர்ந்து லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாகவும் ஜீவா தெரிவித்தார்.
இதனிடையே, அண்மையில் வெளியான தகவலில், செரெண்டா தமிழ்ப் பள்ளியின் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி முன்னாள் வாரியத் தலைவர் புகார் அளித்திருப்பதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படம்: Thiban vmb facebook