இலண்டன் – சனிக்கிழமை இரவு இலண்டன் பாலம் வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இதுவரை காவல் துறையினரின் அதிரடி வேட்டையில் நான்கு பெண்கள் உட்பட 12 பேர் கிழக்கு இலண்டன் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
கிழக்கு இலண்டன் என்பது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசியர்களும் மத்திய கிழக்கு நாட்டு மக்களும் அதிகம் வசிக்கும் ஒரு பகுதியாகும். இங்குள்ள பார்க்கிங் (Barking) என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 12 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இங்கு தாக்குதல்காரர்களில் ஒருவன் தங்கியிருந்தான் என்ற அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து அருகிலுள்ள ஈஸ்ட்ஹாம் என்ற பகுதியில் அதிரடித் தேடுதல் வேட்டைகளை காவல் துறையினர் நடத்தினர்.
இங்கு 3 பேர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தாக்குதல்காரர்களைச் சமாளிக்க சனிக்கிழமை இரவு பதில் தாக்குதலின்போது காவல் துறையினர் சுமார் 50 துப்பாக்கிக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 48 பேரில் 36 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 21 பேர் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.