Home Featured நாடு சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற மஇகா – சமூக இயக்கங்கள் போராட்டம்!

சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற மஇகா – சமூக இயக்கங்கள் போராட்டம்!

955
0
SHARE
Ad

seafield-mariamman temple-

சுபாங் – மேம்பாட்டுத் திட்டங்களால் பாதிப்புக்குள்ளாகி மாற்று இடம் வழங்கப்பட்டிருக்கும் 126 ஆண்டுகால பழமை வாய்ந்த சீ பீல்ட் தோட்ட மாரியம்மன் ஆலயத்தை தற்போது அது அமைந்திருக்கும் அதே இடத்தில் நிலைநிறுத்தும் போராட்டத்தில், சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு எதிராக மஇகாவினரும், பல்வேறு சமூக, இந்து சமய இயக்கங்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

KLANGமேம்பாட்டாளரின் கோரிக்கைக்கு ஏற்ப, அந்த ஆலயத்தை மாற்ற வேண்டியதில்லை, அதனைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம், சிலாங்கூர் அரசாங்கத்திற்கும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் கணபதி ராவுக்கும் (படம்) உண்டு என மஇகா இளைஞர் பகுதியின் சார்பில் விடுத்த அறிக்கை ஒன்றில் அதன் செயலாளர் அரவிந்த் கிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற முடியாவிட்டால், கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அரவிந்த் கிருஷ்ணன் (படம்) சவால் விட்டுள்ளார்.

இதன் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை சிலாங்கூர் மாநில அரசின் செயலகத்தில் ஆட்சேப மனு ஒன்றை மஇகா இளைஞர் பகுதியினரும், மஇகா சிலாங்கூர் மாநிலத்தினரும் இணைந்து வழங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தங்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இன்று திங்கட்கிழமை இரவு 8.00 மணியளவில் மஇகாவினர் கிள்ளானில் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்துகின்றனர் என்றும் அந்தக் கூட்டத்தில் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் மற்றும் தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சமூக இயக்கங்களின் போராட்டம்

இதற்கிடையில், இன்னொரு கோணத்திலும் சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்றும் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. சமூக இயக்கங்களும், இந்து அமைப்புகளும் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ராமாஜி தலைமை ஏற்றிருக்கிறார்.

நீதிமன்ற நடவடிக்கை எடுத்து, அதன் மூலம் ஆலயம் உடைபடாமல் இருக்கவும், தடையுத்தரவு பெறவும் இந்த ஒருங்கிணைப்புக் குழு போராட்டத்தில் இறங்கியிருக்கின்றது.

இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தின் பார்வையும் கவனமும், சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தை நோக்கித் திரும்பியிருக்கின்றது.

2008 பொதுத் தேர்தலுக்கு முன்பாக பாடாங் ஜாவா ஆலயம் உடைக்கப்பட்டு அதன் மூலம் சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி அரசாங்கம் கவிழ்ந்ததைப் போன்று, இந்த ஆலயப் பிரச்சனையும், அடுத்த பொதுத் தேர்தல் நடைபெற ஓராண்டு இருக்கும் காலகட்டத்தில் சிலாங்கூரில் உள்ள இந்துக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

-செல்லியல் தொகுப்பு