சென்னை – மலேசியாவுக்குள் நுழைவதற்கு வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதிமுக கட்சியினர் இங்குள்ள மலேசியத் தூதரகம் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் மலேசியத் தூதரகத்தின் முன்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.
வைகோ ஏன் கைது?
இதற்கிடையில் மலேசியாவில் நுழைவதற்கு வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, தொடர்ந்து அனைத்து இந்திய தொலைக்காட்சி ஊடகங்களிலும் குறிப்பாக தமிழக ஊடகங்களில் முதன்மைச் செய்தியாகியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடைந்த வைகோவின் பெயர் ‘ஆபத்தானவர்கள் பட்டியலில்’ இருப்பதாகவும், விடுதலைப் புலிகளுடனான அவரது தொடர்புகள் காரணமாக, அவரது பெயர் ஆபத்தானவர்கள் பட்டியலில் இருப்பதாகவும் கூறிய மலேசிய அதிகாரிகள் அவரது அனைத்துலகக் கடப்பிதழை (பாஸ்போர்ட்) பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் யாரையும் சந்திக்க முடியாதபடி தனியான பகுதியில் வைக்கப்பட்டதாகவும், அவருடன் வந்த அவரது செயலாளர் அருணகிரி விமான நிலைய உணவகம் சென்று அவர்களுக்கு உணவு வாங்கி வரலாம் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்ததாகவும், நியூஸ் 18 தொலைக்காட்சி நிறுவனம் தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டது.
இருப்பினும் வைகோ உணவு எதனையும் உண்ண மறுத்துவிட்டார் என்றும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் புதல்வி திருமண வைபவத்துக்காக வைகோ மலேசியா வந்தார் என்றும் அந்த தொலைக்காட்சி ஊடகம் மேலும் தெரிவித்தது.
இன்றிரவு சென்னைக்குப் புறப்படும் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் சென்னைக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் நியூஸ் 18 செய்தி தெரிவித்தது.
மற்றொரு ஊடகச் செய்தியின்படி, துணை முதல்வர் இராமசாமியும், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கும் குடிநுழைவு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வைகோவை அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் இருப்பினும் குடிநுழைவு அதிகாரிகள் மறுத்து விட்டதாகவும் உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
-செல்லியல் தொகுப்பு