கோலாலம்பூர் – வரும் ஜூலை 1-ம் தேதி முதல், 60 வகைகளுக்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு, பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடல் உணவுகள், பழங்கள், தேயிலை, காஃபி, மசாலா மற்றும் நூடுல்ஸ் போன்ற பொருட்களுக்கு சேவை வரி விதிக்கப்படும் எனத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
இதனை சுங்கத் துறை பொது இயக்குநர் டத்தோ சுப்ரமணியம் துளசியும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
கடல் உணவுகளில் ஈல், வாள மீன், பழ வகைகளில் அவகேடோ, திராட்சை, செர்ரி, பெர்ரி, காய்கறிகளில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி, அரைக்கீரை, மக்கா சோளம் போன்றவைகளுக்கு சேவை வரி விதிக்கப்படவிருப்பதாக சுப்ரமணியம் தெரிவித்தார்.
மேலும், பீஹூன், குவே தியாவ், லக்சா மீ மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றிருக்கும் சேவை வரி விதிக்கப்படவிருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசாங்கம் 6 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.