Home Featured நாடு மாணவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள் – டாக்டர் சுப்ரா அறிவிப்பு

மாணவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்கள் – டாக்டர் சுப்ரா அறிவிப்பு

853
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடு முழுமையிலும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களின் நலன்களைப் பேணவும், அவர்களை சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், சரியான முறையில் வார்த்தெடுக்கவும் பகல் நேர பராமரிப்பு மையங்கள், இந்தியர் புளுபிரிண்ட் திட்டத்தின் கீழ் கட்டம் கட்டமாக நிர்மாணிகப்படும் என டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று திங்கட்கிழமை அறிவித்தார்.

பேராக், சுங்கை சிப்புட்டில் ஹீவுட் தமிழ்ப் பள்ளி என்ற புதிய தமிழ்ப் பள்ளியை நிர்மாணிப்பதற்கான உறுதிக் கடிதத்தை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் கோலாலம்பூரில் உள்ள சுகாதார அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் சுப்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

முதல் கட்ட பரிட்சார்த்தத் திட்டமாக ஜோகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டங்கள் தொடங்கப்படும். இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களுடைய இல்லத்தில் போதுமான இடவசதிகளோ, குடும்ப சூழ்நிலைகளோ இல்லாத பட்சத்தில் அவர்கள் இந்த பராமரிப்பு மையங்களை நாடலாம்.

நேற்று திங்கட்கிழமை சுங்கை சிப்புட்டில் ஹீவுட் என்ற புதிய தமிழ்ப் பள்ளியின் நிர்மாணிப்புக்கான உறுதிக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் டாக்டர் சுப்ரா…

இங்கு அவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்படுவதோடு, அவர்கள் படிப்பதற்கான சூழலும், தங்களின் நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். கணினி மற்றும் இணையம் பயன்பாடுகள், அமர்ந்து படிப்பதற்கான சூழல் ஆகியவற்றோடு, அவர்களுக்கு, தன்முனைப்புத் தூண்டல் பயிற்சிகள், சமூக சீர்கேடுகளில் அவர்கள் சிக்காமல் இருப்பதற்கான தடுப்பு வழிமுறைகளும் அவர்களுக்குப் போதிக்கப்படும்.

விளையாட்டு போன்ற துறைகளிலும், ஓவியம், எழுத்து போன்ற கலைவடிவங்களில் மாணவர்கள் ஈடுபடுவதற்கும், தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இந்த பராமரிப்பு மையங்கள் உதவி புரியும்.

மாணவர்களுக்குரிய வசதிகளோடு, அவர்களை சரியான முறையில் வழிகாட்டவும், ஆலோசனைகளை வழங்கும் நபர்களும் இந்த மையத்தில் செயல்படுவார்கள். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள். பல்கலைக் கழக மாணவர்கள் விரும்பினால், இந்தப் பராமரிப்பு மையங்களில் உள்ள மாணவர்களுக்கு ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள்.

உள்ளூர் சமூக நல இயக்கங்கள், அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றின் உதவியோடு இந்த பராமரிப்பு மையங்கள் நிர்வகிக்கப்படும். அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கும்.

இதன்மூலம், இடைநிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் சிந்தனைகளை குண்டர் கும்பல்தனம், போதைப் பொருள் போன்ற சமூக சீர்கேடுகளின் மீது செலுத்துவதும், ஈடுபடுவதும் தவிர்க்கப்படும். சமூக அவலங்களினால் அவர்கள் திசை திருப்பப்படுவதும் தடுக்கப்படும்.

மற்ற சில நாடுகளிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன, அவற்றையும் நாங்கள் ஆய்வு செய்து அதன் வெற்றிகரமான அம்சங்களை எங்களின் திட்டத்தில் இணைத்திருக்கிறோம் என்றும் டாக்டர் சுப்ரா கூறினார்.

அண்மைய சில விரும்பத்தகாத சம்பவங்களின் காரணமாக இந்தத் திட்டம் உருவாகவில்லை என்றும் 2010 ஆம் ஆண்டு முதலே இதற்கான வடிவமைப்பு மற்றும் கருத்துருவாக்கப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் தெரிவித்த டாக்டர் சுப்ரா கடந்த ஆண்டே பிரதமர் இதற்கான ஒப்புதலை அளித்து விட்டார் என்றும் குறிப்பிட்டார்.

இப்போதுதான், இந்தத் திட்டத்தின் செயல் திட்ட மாதிரி முழு வடிவம் பெற்றுள்ளதாகவும், இதன் அமுலாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் டாக்டர் சுப்ரா மேலும் கூறினார்.

படம், தகவல் – நன்றி: drsubra.com