Home Featured இந்தியா புதிய அதிபர்: கோவிந்துக்கு ஆதரவு பெருகுகிறது

புதிய அதிபர்: கோவிந்துக்கு ஆதரவு பெருகுகிறது

1594
0
SHARE
Ad

புதுடில்லி – புதிய அதிபராக பாஜக அணியினரால் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பீகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்துக்கு (படம்) நாடு எங்கிலும் ஆதரவு பெருகி வருகின்றது.

அவரது தேர்வால், எதிர்க்கட்சிகளிடையே தற்போது பிளவும் ஏற்பட்டிருக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கூடி பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், தற்போது பாஜக தனது அபாரமான வியூகத்தால் ராம்நாத் கோவிந்தை நிறுத்தியிருப்பதால் எதிர்க்கட்சிகளிடையே முட்டல் மோதல்கள் வெடித்துள்ளன.

#TamilSchoolmychoice

சில எதிர்க்கட்சி தரப்புகள் கோவிந்தை ஆதரிக்க முன்வந்திருப்பதால், 71 வயதான அவர் புதிய அதிபராக தேர்வு பெறுவது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. அவருக்கு சாதகமானதாக கீழ்க்காணும் அம்சங்கள் பார்க்கப்படுகின்றன:

  • கோவிந்த் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், தலித் ஆதரவு அமைப்புகள், கட்சிகள் அனைத்தும் கோவிந்தை ஆதரிக்க முன்வந்திருக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்டால், கேரளாவைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணனுக்கு அடுத்து இரண்டாவது தலித் பிரிவு அதிபராக கோவிந்த் திகழ்வார். தலித் தலைவர்களில் ஒருவரான மாயாவதியும் தனது ஆதரவைப் புலப்படுத்தியிருக்கின்றார்.
  • ஒரு வழக்கறிஞர் என்பதால், ஓர் அதிபர் முடிவெடுப்பதற்கு முன்னால் அவருக்கு இருக்க வேண்டிய சட்ட அறிவையும், இந்திய அரசியல் அமைப்பு சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்ளும் திறனையும் கொண்டவராக கோவிந்த் திகழ்கிறார். இந்திய உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்கிறார்.
  • எதிர்க்கட்சிகளும் மற்றொரு தலித் வேட்பாளரை அறிவித்தால் மட்டுமே போட்டி கடுமையாக இருக்கும் என்றும், இல்லாவிட்டால் கோவிந்தே அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அடுத்த அதிபராகப் பெயர் குறிப்பிடப்பட்டவுடன் பாஜக தலைவர் அமித் ஷாவையும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் நேற்று திங்கட்கிழமை சந்தித்த கோவிந்த்…

  • பீகார் மாநில ஆளுநர் என்பதால், முக்கிய எதிர்க்கட்சியாக பாஜகவுக்கு எதிராகக் கொடி தூக்கும் பீகார் முதல்வரும், ஜனதா தளக் கட்சித் தலைவருமான நிதிஷ்குமாரே கோவிந்தை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் யாரும் கோவிந்த் அதிபராக வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதும், அவர் அதிபராகவதற்கு தகுதியானவர் இல்லை என்று யாரும் அவரைக் குற்றம் சொல்லவில்லை என்பதும் அவருக்கு இருக்கும் மற்ற சில சாதகங்களாகும்.
  • முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் உயர்நிலை உதவியாளராகப் பணியாற்றிவர் கோவிந்த்.

 

நரேந்திர மோடியுடன் ராம் நாத் கோவிந்த்…

  • இந்தியாவுக்கான ஐநாவின் தூதராக நியூயார்க்கில் பணியாற்றியவர் கோவிந்த்.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்பதால், மிகப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆதரவையும் கோவிந்த் பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்டவர் என்பது ஒன்று மட்டுமே அவருக்கு எதிரான கருத்தாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், அந்த ஆர்எஸ்எஸ் பின்னணிதான் இன்றைக்கு ஒட்டு மொத்த பாஜகவையும், கோவிந்த்தின் பின்னால் அணிவகுக்கச் செய்திருக்கின்றது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

-செல்லியல் தொகுப்பு