ஜோர்ஜ் டவுன் – சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் செபராங் பிறை போலிடெக்னிக் கல்லூரியின் இந்தியர் உணவக விவகாரம் குறித்து முழு விவரம் அறிந்து கொள்ள மஇகா பினாங்கு மாநிலத்தின் இளைஞர் பகுதி குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை அந்தக் கல்லூரிக்கு வருகை தந்து கல்லூரி இயக்குநர் ஹாஜி சுல்கிப்ளி பின் அரிபின் – என்பவரைச் சந்தித்தனர்.
பினாங்கு மாநில மஇகா இளைஞர் பகுதித் தலைவர் எம்.பிரகாஷ், மாநில இளைஞர் பகுதிப் பொருளாளர் எம்.சண்முகம், இளைஞர் பகுதி நிர்வாக செயலாளர் எல்.முனீஸ்வரன் ஆகியோர் மஇகாவின் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
செபராங் பிறை போலிடெக்னிக் கல்லூரி இயக்குநர் சுல்கிப்ளியுடன் மஇகா பினாங்கு மாநில இளைஞர் பிரிவினர்…(படம்: நன்றி – பிரி மலேசியா டுடே)
அதன் பின்னர் அவர்கள் விடுத்த அறிக்கையில் இந்த விவகாரம் குறித்து போலிடெக்னிக் இயக்குநரிடம் விவாதித்ததாகவும், தானும் தனது நிர்வாகமும் கோபி கிருஷ்ணன் இஸ்லாம் மதத்துக்கு மாறுவது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
ஹலால் சான்றிதழ்
உணவகம் நடத்தி வந்த கோபி கிருஷ்ணனிடம் ஹலால் சான்றிதழ் (இஸ்லாமிய முறைப்படி தயாரிக்கப்பட்ட உணவு) மட்டுமே பெறவேண்டும் என தாங்கள் கடந்த 10 மாதங்களாக கேட்டுக் கொண்டதாகவும் இயக்குநர் சுல்கிப்ளி கூறியுள்ளார்.
“ஆனால் 10 மாதங்களாக கோபி கிருஷ்ணன் நாங்கள் கேட்டுக் கொண்டபடி ஹலால் சான்றிதழ் பெறவில்லை. 30 ஜூன் 2017 தேதியோடு அவருக்கான குத்தகை முடிவடைவதால் அதற்குள் ஹலால் சான்றிதழைப் பெறவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். இது அவருக்கு மட்டும் விடுக்கப்பட்ட நிபந்தனையல்ல. மாறாக, எல்லா 12 உணவகம் நடத்துபவர்களுக்கும் கொடுக்கப்பட்ட நிபந்தனையாகும்” என்றும் சுல்கிப்ளி விளக்கியுள்ளார்.
இந்திய உணவகம் நடத்துபவர்களுக்கு ஏன் ஹலான் சான்றிதழ் என்ற கேள்வி சமூக ஊடகங்களில் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
இருப்பினும், இது எங்கள் போலிடெக்னிக் விதிக்கும் நிபந்தனையல்ல, மாறாக, கல்வி அமைச்சின் உத்தரவு என்றும் சுல்கிப்ளி மேலும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசத் தாங்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு உதவி புரியத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், சுல்கிப்ளி மஇகா குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார்.
இராமசாமி அரசியல் இலாபம் தேடுகிறார்
“எங்கள் கேள்வியெல்லாம், இந்தப் பிரச்சனையை பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி (படம்) ஏன் போலிடெக்னிக் இயக்குநரைச் சந்தித்து பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சி செய்யாமல் இதை மத்திய அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதமாக ஏன் பயன்படுத்துகிறார் என்பதுதான். பாதிக்கப்பட்ட கோபி கிருஷ்ணன் அவரது தீவிர ஆதரவாளர் என்பதும் அவரது தொகுதியில் உள்ள பணிக்குழுவின் நிர்வாகக் குழு உறுப்பினராக இடம் பெற்றிருக்கிறார் என்பதும்தான் காரணமா?” என்றும் பினாங்கு இளைஞர் பகுதியினர் தங்களின் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“எங்களின் இந்திய சகோதரர் ஒருவர் அரசாங்கக் கல்லூரியில் உணவகம் நடத்துவதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள் குறித்து நாங்கள் உண்மையாகவே, உணர்வுபூர்வமாக அக்கறையுடன் அணுக விரும்புகிறோம். ஆனால் அதே சமயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் ஆளுக்கு ஆள் கருத்து சொல்வதும், முடிவுக்கு வருவதும், அரசியல் தரப்புகள் இந்த விவகாரத்தைத் தங்களுக்குச் சாதகமாகக் கையில் எடுத்துக் கொண்டு, இன, மத விவகாரமாக பெரிதாக்குவதற்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாது” என்றும் பினாங்கு மாநில இளைஞர் பகுதியினர் தங்களின் அறிக்கையில் வலியுறுத்தியிருக்கின்றனர்.