Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ‘இவன் தந்திரன்’ – அமைச்சருக்கும், சாதாரண மனிதனுக்குமான தந்திர விளையாட்டு!

திரைவிமர்சனம்: ‘இவன் தந்திரன்’ – அமைச்சருக்கும், சாதாரண மனிதனுக்குமான தந்திர விளையாட்டு!

1321
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ‘முத்துராமலிங்கம்’ படத்தில் படு பயங்கரமாக கேலியும், கிண்டலுக்கும் ஆளான கௌதம் கார்த்திக்கிற்கு ‘ரங்கூன்’ நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாகும் படமும் கண்டிப்பாக நல்ல பெயரைக் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில், தான் ‘இவன் தந்திரன்’ வெளியாகியிருக்கிறது.

எஞ்சினியரிங் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்ட கௌதம் கார்த்திக்கும், ஆர்.ஜே.பாலாஜியும், ரித்தி தெருவில் செல்போன், லேப்டாப் விற்பனை செய்யும் கள்ள மார்கெட் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அப்போது ஸ்டண்ட் சில்வா மூலமாக அமைச்சர் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தும் வாய்ப்பு கௌதமுக்கு கிடைக்கிறது. அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது ஏற்படும் ஒரு பிரச்சினையால், கௌதம் மீது கோபம் கொள்ளும் அமைச்சர் தரப்பு, வேலைக்கான காசைக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள்.

பண விவகாரத்தால் இரு தரப்புக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது. பணத்தை திரும்பப் பெற ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கும் கௌதம், கல்லூரி என்ற பெயரில் மாணவர்களிடம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் அமைச்சரின் வண்டவாளங்களை, தனது எஞ்சினியரிங் மூளையைப் பயன்படுத்தி அதை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது தான் பிற்பாதி சுவாரசியம்.

ரசிக்க

கௌதம் கார்த்திக்.. நடிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைத்தனம் மறைந்து வருவது நன்றாகத் தெரிகின்றது. குறிப்பாக வசனத்தை தெளிவாகப் பேச மிகவும் முயற்சி செய்திருக்கிறார். மேலும் உரத்த குரலில் தொடை தட்டி எதிரிக்கு சவால் விடும் படியான சூப்பர் ஹீரோவாக இல்லாமல் எதார்த்தமான இந்தக் கதாப்பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துகிறார் என்பதே படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. பார்ப்பதற்கு பளிச்சென அழகாகத் தெரிகின்றார். இயல்பான மேக்கப்பில் பக்கத்துவீட்டுப் பெண் போல் தெரிகிறார். நடிப்பிலும் நன்றாகவே மிளிர்கிறார். பெங்களூர் நேர்காணலில் உளறிக்கொட்டுவது, கௌதமிடம் காதலை வெளிப்படுத்துவது போன்ற இடங்களில் மிக அழகு.

காமெடிக்கு ஆர்.ஜே.பாலாஜி.. முதல் பாதி முழுக்க அவர் அடிக்கும் பஞ்ச் டயலாக்கில் தான் படம் கலகலப்பாக நகர்கிறது. “ஹேராம் ஹீரோயின் உதடு”, “காண்டம்” எனக் கொஞ்சம் நெளியவும் வைக்கிறார்.

இவர்கள் தவிர சூப்பர் சுப்புராயன், ஸ்டண்ட் சில்வா ஆகியோரின் நடிப்பும் மிகச் சிறப்பு.

இயக்குநர் ஆர்.கண்ணனின் வசனங்கள் மிக எதார்த்தமாக அமைந்திருக்கிறது. எஞ்சினியரிங் பட்டதாரிகள், கல்வி தந்தை என்ற பெயரில் கல்வியை காசாக்கும் கூட்டம் என நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கிறது. அதற்கு பாராட்டுகள்.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக இயல்பாகத் தெரிகின்றன. அதுவே படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

தமன் இசையில், பாடல்கள் கேட்கும் இரகம். பின்னணி இசை ரசிக்க வைக்கின்றது.

சலிப்பு

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவரை ஒரு சாதாரண ஹீரோ தனது சாதுரியத்தால் வீழ்த்துவது தான் படத்தின் மையக்கரு. இதைச் சொல்லும் போதே அலுப்பு ஏற்படும் அளவிற்கு பட படங்களில் பார்த்து சலித்துப் போன கான்செப்ட். கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கலாம்.

ஒரு சாதாரண மனிதன் அமைச்சரைச் சந்திப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் போது, அமைச்சரை தனது தந்திரத்தால் வீழ்த்துவது, அமைச்சர் பதவியில் இருந்து இறக்குவது, கருப்புப் பண விவகாரத்தில் போலீசிடம் சிக்க வைப்பதெல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. நம்ப முடியவில்லை. என்றாலும், அதை மறந்து கதை சொல்லப்பட்ட விதத்தில் இருக்கும் சில சுவாரசியங்களால் படத்தை  தொடர்ந்து பார்த்து ரசிக்கிறோம்.

முதல் பாதியிலேயே இயக்குநர் தனது ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கி வைத்துவிட்டதாலோ என்னவோ, இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்வதில் அவ்வளவு சிரமப்படுகின்றது. அதை இன்னும் மெனக்கெட்டு சுவாரசியம் கூட்டியிருக்கலாம்.

இப்படியாகப் படத்தில் சில பல குறைகள் தெரிந்தாலும், ‘இவன் தந்திரன்’ ரசிகர்களை ஏமாற்றாது.

மொத்தத்தில் – ‘இவன் தந்திரன்’ – அமைச்சருக்கும், சாதாரண மனிதனுக்குமான தந்திர விளையாட்டு!

-ஃபீனிக்ஸ்தாசன்