Home Featured தமிழ் நாடு வைகோ மீது தாக்குதல்: திமுக தலைமை வருத்தம் தெரிவித்தது

வைகோ மீது தாக்குதல்: திமுக தலைமை வருத்தம் தெரிவித்தது

842
0
SHARE
Ad

tks-elangovan

சென்னை – இன்று சனிக்கிழமை மாலை கலைஞர் கருணாநிதியைச் சந்திக்க காவேரி மருத்துவமனை வந்த வைகோ மீதும், அவரது கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து திமுக தலைமையின் சார்பில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான டிகேஎஸ்.இளங்கோவன் (படம்) உடனடியாக வருத்தம் தெரிவித்தார்.

வைகோ காவேரி மருத்துவமனையை விட்டு வெளியேறிய சில நிமிடங்களில் உடனடியாகப் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த டிகேஎஸ்.இளங்கோவன், திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், மாற்றுக் கட்சியினர் தலைவரைச் சந்திக்க வரும்போது பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

வைகோ வருவது குறித்து முன்பே தங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும், கீழே சென்று அவரை நேரடியாக அழைத்து வரும்படி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் கீழே வந்ததாகவும் ஆனால் அதற்குள் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து, வைகோ திரும்பி விட்டதாகவும், நடந்த சம்பவத்திற்கு திமுக தலைமை சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் இளங்கோவன் கூறினார்.

அவருடன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திருச்சி சிவாவும் உடனிருந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.

இருப்பினும் வைகோவுக்கு நேர்ந்தது திட்டமிடப்பட்ட சம்பவம் என மதிமுக பிரமுகர் மல்லை சத்யா தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார். கட்சித் தொண்டர்களைச் சமாதானப்படுத்த திமுக தலைவர்கள் யாரும் முன்வரவில்லை என்றும் இது ஒரு நாகரீகமற்ற செயல் என்றும் மல்லை சத்யா மேலும் கூறியுள்ளார்.

ஸ்டாலின் கண்டனம்

வைகோ மீதான தாக்குதல் குறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், அந்த அறிக்கையில், “வைகோவை தடுத்து நிறுத்தியதை கண்டிக்கிறேன். வைகோ வந்தபோது மருத்துவமனையில் நான் இல்லை. விரும்பத்தகாத சம்பவத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதுபோன்ற சம்பவங்களில் எனக்கோ, தலைவர் கலைஞருக்கோ உடன்பாடில்லை” என தெரிவித்துள்ளார்.