கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை இரவு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கோல்ட் கோஸ்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் ஆசியா எக்ஸ் விமானம், பறவை மோதி எஞ்சின் பழுதானதால், உடனடியாக பிரிஸ்பேன் விமான நிலையம் நோக்கி திசை திருப்பப்பட்டது.
345 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் இருந்த அவ்விமானம் இரவு 11.33 மணியளவில் பிரிஸ்பேன் நகரில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
இதனிடையே, விமானத்தின் வலது பக்க எஞ்சினில் வெடிப்புச் சத்தமும், தீப்பொறிகளும் காணப்பட்டதையடுத்து பயணிகள் அலறத் தொடங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
எனினும், விமானிகள் இருவரும் பயணிகளை அமைதியடையச் செய்து, விமானத்தைப் பாதுகாப்பாக பிரிஸ்பேனில் தரையிறக்கியிருக்கின்றனர்.