கோலாலம்பூர் – அன்வாருக்கு எதிராக நடைபெற்ற ஓரினப்புணர்ச்சி வழக்கில் நியாயமான அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்றவில்லை என்றும், அதன் காரணமாகவே அவர் சிறையில் தள்ளப்பட்டார் என்றும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பிரிட்டனின் ‘தி கார்டியன் டுடே’ என்ற செய்தி நிறுவனத்திற்கு மகாதீர் அளித்திருக்கும் பேட்டியில், “அடுத்து வரும் அரசாங்கம் அன்வாருக்கு பொது மன்னிப்பு அளிக்கக் கோரி மாமன்னருக்கு கோரிக்கை விட வேண்டும். அன்வார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் அரசியலில் தீவிரமாக இயங்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேவேளையில், அன்வார் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர், நானே அன்வாரைப் பிரதமராக்குவேன் என்றும் மகாதீர் சூளுரைத்திருக்கிறார்.
கடந்த 1998-ம் ஆண்டு, மகாதீர் பிரதமராக இருந்த போது, அன்வார் மீதான ஓரினப்புணர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரைத் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.