Home Slider மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 35-வது தேசியப் பேராளர் மாநாடு 2017

மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 35-வது தேசியப் பேராளர் மாநாடு 2017

1295
0
SHARE
Ad

MHDM35thanniversaryகோலாலம்பூர் – மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 35-வது தேசியப் பேராளர் மாநாடு 2017, நாளை ஜூலை 8 -ம் தேதி, சனிக்கிழமை காலை 11.00 மணிக்குத் துவங்கி, மறுநாள் ஜூலை 9-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி வரை போர்ட்டிக்சன் நெகிரி செம்பிலானில் உள்ள என்யுபிஇ (NUBE) பயிற்சி நிலையத்தில் நடைபெறவிருக்கிறது.

இம்மாநாடு குறித்து இந்து தர்ம மாமன்றம் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கை பின்வருமாறு:-

“இந்த இரண்டு நாள் மாநாட்டில் சுமார் 200 பேராளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.”

#TamilSchoolmychoice

“பேராளர் மாநாட்டின் முதல் நாள் பிற்பகல் 2.00 மணி தொடங்கி மாமன்ற அனைத்து தேசிய உபக்குழுக்கள், கோட்டம் மற்றும் அருள்நிலையங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் அறிக்கைகள் மற்றும் திட்டங்கள் பேராளர்களிடம் பரிசீலனைக்காகச் சமர்பிக்கப்படும்.”

“அன்று இரவு மணி 7.00க்கு மேல் விருதளிப்பு விழா நடைபெறும். மாமன்றத்திற்கும், இந்து தர்மத்திற்கும், சமூகத்திற்கும் ஆற்றிய தன்னலமற்ற திருத்தொண்டினை அங்கீகரித்து வருடந்தோறும் வழங்கப்படுவதைப் போல இவ்வாண்டும் ஐவருக்குத் ‘தர்ம சிகாமணி’, ‘தர்ம மாமணி’ மற்றும் ‘தர்ம வர்ஷிணி’ ஆகிய விருதுகளை மாமன்றம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கவிருக்கிறது.”

“அது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் கால்பதித்து வெற்றிவாகை சூடி உலக அளவில்  மலேசிய இந்துக்களுக்கு பெருமிதம் சேர்த்ததை அங்கீகரித்து இராமன் நாயர் அச்சுதனுக்கு மாமன்றத்தின் 2017-ம் ஆண்டிற்கான சிறப்பு விருதினையும்,  தம் சேவையின்போது இந்து சமூகத்திற்கு ஆற்றிய சமூக சேவையை அங்கீகரித்து போற்றுதற்குரிய டிசிபி டத்தோ பரமசிவம் அருணாசலத்திற்கும், 2017-ம் ஆண்டிற்கான மாமன்ற தேசிய விருதினை வழங்கி பாராட்டி அன்னாரைக் கௌரவிக்கவிருக்கிறது. மேலும் இவ்விருந்து நிகழ்வில் மாமன்றத்தின் தேசிய ஆலோசகரும் அறங்காவலருமாகிய தர்ம பூஷணம் பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ்.இராஜேந்திரனும் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.”

“வட்டாரப் பொதுமக்கள் நாட்டிலுள்ள பிற சமய மொழி அரசு சார்பற்ற இயக்க பொறுப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் தவறாமல் இவ்விருந்து நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்” என இந்து தர்ம மாமன்றம் சார்பில் அதன்  தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை ஏஎம்என் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

மேல் விவரங்களுக்கும் வருகைப் பதிவிற்கும் மாமன்றத் தேசியக் கௌரவப் பொதுச் செயலாளர்  ரிஷிகுமார் வடிவேலுவைத் தொடர்புகொள்ளவும். தொலைபேசி எண்: 012 – 2016115