கோலாலம்பூர் – சங்கப் பதிவகத்திற்கு, ஜசெக கட்சியின் பதிவை இரத்து செய்ய வேண்டும் என்று எந்த ஒரு நோக்கமும் இல்லை. ஆனால் அதன் மத்தியச் செயலவை உறுப்பினர்களுக்காக, கட்சி புதிதாகத் தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என சங்கப் பதிவகத்தின் (ஆர்ஓஎஸ்) பொது இயக்குநர் டத்தோ முகமது ரசின் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.
20 சட்டப்பூர்வ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத்தியச் செயலவை உறுப்பினர்களுக்கு புதிதாகத் தேர்தல் நடத்தும்படி, சங்கப்பதிவகம் கடிதம் ஒன்றை ஜசெக-விற்கு அனுப்பும் என்றும் முகமது ராசின் தெரிவித்திருக்கிறார்.
“ஜசெக அரசியலமைப்பு மற்றும் சங்கங்கள் சட்டம் 1966-ன் படி தான் ஆர்ஓஎஸ் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளும். சட்டப்படி, ஜசெக-வை ஆர்ஓஎஸ் அதிகாரப்பூர்வ கட்சியாக அங்கீகரித்திருக்கிறது” என்று முகமது ராசின் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு, செப்டம்பர் 29-ம் தேதி, நடைபெற்ற ஜசெக மறுதேர்தல் நடவடிக்கையில் சில ஜசெக உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.