கோலாலம்பூர் – இந்திய பாரம்பரியத்தைக் கொண்ட முன்னாள் பிரதமரை விட, தான் தமிழ் மொழிக்கு அதிகமான சேவைகள் செய்வதாகப் பாராட்டப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்திய பாரம்பரியத்தைக் கொண்ட முன்னாள் பிரதமர் என்று பெயர் சொல்லாமல் அவர் குறிப்பிட்டாலும் கூட, அது துன் டாக்டர் மகாதீர் முகமது தான் என்பது தெளிவாகத் தெரிகின்றது. காரணம், மகாதீரின் மூதாதையர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
“இந்நிலையில், நஜிப் பேசுகையில், “ஒவ்வொரு நிதியாண்டிலும், சீனப் பள்ளிகள், தமிழ்ப் பள்ளிகள், இஸ்லாமியப் பள்ளிகள் மற்றும் சமயம் சார்ந்த பள்ளிகள் ஆகியவற்றிற்கு நாம் நிதி ஒதுக்கி வருகின்றோம்”
“மேலும் அது தொடர்ந்து கொண்டிருக்கையில், நான் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து இதுவரை, தமிழ்ப் பள்ளிகளுக்காக மொத்தம் 900 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியிருப்பதாக டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இப்போது தான் என்னிடம் தெரிவித்தார்”
“மேலும், இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த எனக்கு முன்னால் பதவி வகித்த எல்லாப் பிரதமர்களையும் விட நான் (தமிழ்ப் பள்ளிகளுக்கு) அதிகம் செய்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்” என புத்ராஜெயாவில் நடைபெற்ற, நாட்டில் 200 ஆண்டுகள் தமிழ்க் கல்வி என்ற நிகழ்ச்சியில் உரையாற்றும்போது நஜிப் தெரிவித்தார்.