கோலாலம்பூர் – மலேசியாவில் வெகுவேகமாக வளர்ந்து வரும் ‘கிராப்’ (Grab) வாடகை வண்டி (டாக்சி) நிறுவனம் 2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை சீனாவின் டிடி சுக்சிங் மற்றும் சாப்ட்பேங்க் ஆகிய நிறுவனங்களிலிருந்து பெற்றிருக்கிறது.
தென்கிழக்காசியாவிலேயே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய முதலீடாக இது கருதப்படுகின்றது. இதுதவிர உலகின் மற்ற பகுதிகளில் இருந்து மேலும் 500 மில்லியன் டாலர் முதலீட்டை கிராப் விரைவில் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய முதலீடுகளைத் தொடர்ந்து கிராப் நிறுவனத்தின் மதிப்பு 6 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும்.
இதன் மூலம் கிராப்பின் போட்டி நிறுவனமான யுபர் (Uber) கடுமையான சவாலை எதிர்நோக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய முதலீடுகளைக் கொண்டு ‘கிராப் பே’ (GrabPay) எனப்படும் செல்பேசி வாயிலான கட்டணம் செலுத்தும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும், விரிவாக்கவும் கிராப் நடவடிக்கைகள் எடுக்கவிருக்கிறது.
2012-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கிராப் நிறுவனம், சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.