Home தமிழ் நாடு கர்ணனுக்குக் கருணை காட்டுவாரா புதிய அதிபர்?

கர்ணனுக்குக் கருணை காட்டுவாரா புதிய அதிபர்?

1458
0
SHARE
Ad

karnan-judge-புதுடெல்லி – நேற்று செவ்வாய்க்கிழமை இந்தியாவின் 14-வது அதிபராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார்.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 6 மாத சிறைத் தண்டனை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், தனது வழக்கறிஞர் மூலம் புதிய அதிபரிடம் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்திருக்கிறார்.

அதில் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் 6 மாத சிறைத் தண்டனையை இரத்து செய்யும் படி கோரப்பட்டிருப்பதாக கர்ணனின் வழக்கறிஞர் மேத்யுஸ் நெடும்பரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், கர்ணனின் மனுவை புதிய அதிபர் பரிசீலனை செய்வாரா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன், உச்சநீதிமன்றத்தால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல் குறித்த புகார் ஒன்றை பிரதமர் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்காமல் ஊழல் புகார் சுமத்திய கர்ணனின் நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தது.

இவ்வழக்கில், கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்ததோடு, அவரைக் கைது செய்ய மேற்குவங்க காவல்துறைக்கும் உத்தரவிட்டது.

அதனையடுத்துத் தலைமறைவாக இருந்து வந்த கர்ணன், கடந்த ஜூன் 20-ம் தேதி, கோவையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.