கோலாலம்பூர் – தனது அரசியல் பாதையில் எத்தனையோ விழுப்புண்களைத் தாங்கிய வரலாறு கொண்ட ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் கடந்த சில நாட்களாக பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது, தலையின் நெற்றிப் பகுதியில் மருந்திட்ட துணி ஒன்றை (பிளாஸ்திரி) ஒட்டியிருந்தார்.
சனிக்கிழமை (ஜூலை 29) ஜோகூர் குளுவாங் நகரில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் நிகழ்ச்சியில் நெற்றியில் பிளாஸ்திரியுடன் லிம் கிட் சியாங்…
என்ன காயம், ஏன் இந்தக் காயம் என அவரைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் கேள்விகள் எழ, அவரே விளக்கம் தந்திருக்கிறார். “வீட்டில் கடந்த வியாழக்கிழமை தவறிக் கீழே விழுந்துவிட்டேன். அதில் ஏற்பட்ட காயம்தான், பிளாஸ்திரி போட்டதற்கான காரணம்” என லிம் கிட் சியாங் தன்னைச் சந்தித்தவர்களிடம் கூறியிருக்கிறார்.
இருப்பினும், 76 வயதான லிம் கிட் சியாங் தொடர்ந்து நெற்றியில் ஒட்டப்பட்ட பிளாஸ்திரியுடனே கூட்டங்களில் உற்சாகமாக, கொஞ்சமும் தொய்வின்றி கலந்து கொண்டு வருகிறார்.