Home கலை உலகம் காயத்ரியிடம் மட்டும் கரிசனம் காட்டுகிறாரா கமல்?

காயத்ரியிடம் மட்டும் கரிசனம் காட்டுகிறாரா கமல்?

1035
0
SHARE
Ad

BigbossGayathiriசென்னை – பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டே வருகின்றது. டீக்கடை முதல் அலுவலகப் பணியிடங்கள் வரை மக்கள் தங்கள் குடும்பப் பிரச்சினைகளோடு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் அசை போட்டபடி தான் இருக்கின்றனர்.

அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 3 ஹவுஸ்மேட்ஸ். ஜூலி, காயத்ரி, ஓவியா. இந்த மூவரில் ஜூலியின் தந்திரமும், காயத்ரியும் ஆணவமும், ஓவியாவின் எதையும் சட்டை செய்யாத குணமும் பலரையும் பேச வைக்கிறது.

இதனிடையே, வார இறுதிகளில் ஹவுஸ்மேட்சின் பிரச்சினைகளைப் பஞ்சாயத்துப் பண்ண வரும் உலகநாயகன், அந்த வாரம் முழுவதும் ஹவுஸ்மேட்ஸ் பேசிய சிறுசிறு விசயங்களைக் கூட நுணுக்கமாகக் கவனித்து அதற்கு விளக்கம் கேட்கிறார்.

#TamilSchoolmychoice

உதாரணமாக, போன வாரம், சினேகனிடம், இனிமேல் என்னை ‘ஏய்.. என்று கூப்பிடாதீர்கள்’ என ரைசா கேட்டுக் கொண்டதைக் கூட நேற்று முந்தைய எபிசோடில் இருதரப்பிடமும் விளக்கம் கேட்டார் கமல்.

இது இப்படி இருக்க.. ஆரம்பம் முதல் காயத்ரியை மட்டும் கமல் கேள்விக்குட்படுத்தப்படாமலேயே இருந்து வருவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

அந்த ‘சாக்லேட் பவுடர்’ விவகாரம் கூட, காயத்ரியை ‘சீர்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்ற தன்னிலை விளக்கத்தை வெளிக் கொண்டுவருவதற்காகவே அமைந்தது.

ஆனால், ஆரம்பத்தில், ஜூலியின் மீது வன்மத்தை வாரி இரைத்து, தனது அடக்குமுறையைப் பிரயோகித்து, அடிமையாக்கும் வரையிலான நாட்களில் பேசிய வார்த்தைகள், தற்போது ஓவியாவைக் குறி வைத்து ஆணவத்துடன் பேசி வரும் வார்த்தைகள் என அனைத்தும் எந்த ஒரு கேள்வியும் கேட்கப்படாமலேயே செல்வது பார்வையாளர்களுக்கு ஒருவித நெருடலையே ஏற்படுத்துகிறது.

அட.. நேற்றைய ஞாயிற்றுக்கிழமை எபிசோடில், ஓவியாவாக நடித்த காயத்ரி, ‘டிஆர்பி.. டிஆர்பி’ என்று பேசி ஓவியாவைக் கிண்டலடித்த போது கூட, “அது ஏன் டிஆர்பி என்று சொன்னீங்க?” என்று கேட்காமல் ஆண்டவர் சிலையாகவே நின்னதன் மர்மம் என்னவோ?

கமல் முன்னால் குழைந்து குழைந்து நன்றாகவே நடிக்கும் காயத்ரி, மற்ற நாட்களில் தனது குரூர முகத்தை வெளிப்படுத்துகிறாரே? அதை குழந்தையிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதால் கமலுக்கு அது ஒரு பெரிய விசயமாகத் தெரியவில்லையோ?

“வெளியே வா.. உன்ன பார்த்துக்கிறோம்” என்று மக்கள் இணையதளங்களில் கூறி வருவதைக் குறிப்பிட்டு, “அநீதியாக எதுவும் செய்து விட முடியாது.. நான் இருக்கேன்.. நான் ஒரு ஆள் போதும்” என்று பொத்தாம் பொதுவாக ஆறுதல் கூறிய கமல், பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே சக ஹவுஸ்மேட்டை, “வெளியே வாடி.. உன்ன வச்சுக்கிறேன்” என்று கூறிய காயத்ரியை பார்த்தும் பார்க்காதது போல்  கடந்து விடுவது ஏனோ?

இப்படியாக காயத்ரி விவகாரத்தில் கமல் நடந்து கொள்வது நிச்சயமாக பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.

ஒரு சிலர் காயத்ரி அரசியல் கட்சி சார்ந்து இருப்பதாலும், கமலின் குடும்ப நண்பர் என்பதாலும் கரிசனம் காட்டுவதாகக் கூறி இணையதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ, ‘வெளியே வாடி உன்ன வச்சுக்கிறேன்’, ‘ஓவியா ஒரு வெசம்’, ‘சேரி பிஹேவியர்’, ‘மூஞ்சியும் மொகரக்கட்டையும்’, ‘ஹேர்’ போன்ற வார்த்தைகளை படுகேவலமான முகபாவணையோடு வெளிப்படுத்திய காயத்ரியின் உண்மையான முகத்தை, கேமரா எந்த ஒரு பாரபட்சமும் இன்றி வெளிப்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது.

அது குறித்து, கமல் கேள்வி கேட்கிறாரோ இல்லையோ? வெளியே வந்தால் மக்கள் கேள்வி கேட்கத் தான் போகிறார்கள்! காயத்ரி சார்ந்திருக்கும் திரைத்துறையினரே அது குறித்து அதிர்ச்சியடைந்து டுவிட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

– செல்லியல் தொகுப்பு